Skip to main content

சுப்மன் கில் விலகல்; இலங்கை சென்ற வீரரை இங்கிலாந்திற்கு அழைக்கும் இந்திய அணி!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

PRITHVI SHAW

 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் அண்மைக்காலமாக விளையாடி வருகிறார்கள். இந்தநிலையில் சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது காயம் குணமாக 6-8 வாரங்கள் வரை ஆகலாம் என  தெரிகிறது.

 

இதனால் இங்கிலாந்து தொடரில் ரோகித்துடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப்போவது யார் என கேள்வி எழுந்தது. இந்தநிலையில் இந்திய அணி நிர்வாகம் ப்ரித்வி ஷாவை இங்கிலாந்து தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் கே.எல் ராகுலை இந்திய அணி நிர்வாகம், மிடில் ஆர்டரில் ஆடவைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

 

மயங்க் அகர்வாலும் சமீபத்தில் சிறப்பாக விளையாடவில்லை என்பதால், கடந்த விஜய் ஹசாரே (ஒருநாள்) தொடரில் சிறப்பாக ஆடி, ஒரே சீசனில் 800 ரன்களை குவித்தவர் என்ற சாதனையை படைத்த ப்ரித்வி ஷாவை தொடக்க ஆட்டக்காரராக விளையாடவைக்க இங்கிலாந்தில் உள்ள இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாகவும், இதுதொடர்பாக அது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் விரைவில் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரித்வி ஷா, தற்போது இலங்கையுடனான ஒருநாள் போட்டியில் ஆட இங்கிலாந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

பிரித்வி ஷாவை விரட்டி விரட்டி தாக்கிய இளம்பெண் (வீடியோ)

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

sapna gill attacked the cricketer prithvi shaw

 

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவை இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் விரட்டி விரட்டித்  தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக இருப்பவர் பிரித்வி ஷா. 23 வயதான இவர், கடந்த 2018 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் பிரித்வி ஷா, ஏப்ரலில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். 

 

இந்நிலையில், பிரித்வி ஷா கடந்த புதன்கிழமையன்று மும்பை ஏர்போர்ட்டுக்கு அருகே உள்ள ஹோட்டலுக்கு தனது நண்பருடன் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது, பிரித்வி ஷாவிற்கு அருகில் வந்த ஒரு ஜோடி தாங்கள் உங்களுடைய ரசிகர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரிடம் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த பிரித்வி ஷா, “ச்ச.. ச்ச.. என்னோட ரசிகருன்னு வேற சொல்றிங்க.. ஒரு போட்டோ தான.. எடுத்துக்கோங்க..” என்பது போல் கூறியுள்ளார்.

 

இதை கப்பென்று பிடித்துக் கொண்ட அந்த ஜோடி, சில போட்டோக்களை எடுத்துக் கொண்டனர். ஆனால், பிரித்வி ஷாவை விடாத அந்த ஜோடி, தொடர்ந்து செல்ஃபி எடுக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் எரிச்சல் அடைந்த பிரித்வி ஷா, தன்னுடைய மேனேஜரை அழைத்து அவர்களை கட்டுப்படுத்துமாறு கூறியுள்ளார். மேலும், இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹோட்டல் நிர்வாகம், அந்த ஜோடியை ஹோட்டலை விட்டு வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது.

 

அதன் பிறகு, ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த அந்த ஜோடி, தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு,  பிரித்வி ஷா அங்கிருந்து புறப்பட்ட பின் அவரது காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து, மும்பையில் சாலையில் வைத்து பிரித்வி ஷாவின் காரை மடக்கிய அந்த கும்பல், பேஸ்பால் மட்டைகளால் அவரையும், அவரது காரையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

 

இதனிடையே, காவல்நிலையத்தில் பிரித்வி ஷா தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சப்னா கில் என்கிற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம், குற்றம் சாட்டப்பட்ட பெண் தரப்பில், பிரித்வி ஷா தான் தன்னை முதலில் தாக்கினார் என அவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.