Skip to main content

சாலைவிபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி!

Published on 25/03/2018 | Edited on 25/03/2018

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Shami

 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவர் டேராடூனில் இருந்து டெல்லி நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த லாரியில் மோதி விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. தலையில் ஏற்பட்ட காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ஷமி, நான்கு தையல்கள் போடப்பட்ட பின் தற்போது வீடுதிரும்பியுள்ளார். பெரிய காயங்கள் எதுவும் இல்லையென்றும், அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், சமீபகாலமாக அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி, பரபரப்பை கிளப்பி வருகிறார். இதனால், மிகுந்த மன உலைச்சலில் இருந்த ஷமி, வருகிற போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். அவர்மீது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர்மீது விசாரணை நடத்திய பிசிசிஐ, தற்போது அதிலிருந்து விடுவித்துள்ளது. மேலும், வரவிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளிலும் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

முகமது ஷமிக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்; மத்திய அரசு அறிவிப்பு

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Central Govt announced arjuna award for cricket player Mohammed Shami

விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2வது உயரிய விருதாக அர்ஜுனா விருது கருதப்படுகிறது. அந்த விருதை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி அந்த வீரர்களைக் கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தன. அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. மனைவியிடம் விவாகரத்து, சூதாட்ட புகார்கள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய முகமது ஷமி, காயத்தாலும் சில ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். சூதாட்டப் புகார்களில் குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி, காயமும் முழுமையாகக் குணமடைந்து புத்துணர்ச்சியுடன் இந்திய அணிக்குத் திரும்பினார். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில், அனுபவ வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். 

இந்தத் தொடரில், முதல் நான்கு போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிக்காத முகமது ஷமி, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது லீக் போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இடம்பிடித்தார். உலகக் கோப்பையில் பங்கு பெற்ற முதல் ஆட்டத்திலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகப் பந்து வீசிய முகமது ஷமி இந்தத் தொடரில் மட்டும் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி, ஒட்டு மொத்தமாக 4 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

முக்கியமாக அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் எனும் புதிய சாதனை படைத்தார். இதனால் இவரை கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டி வந்தனர். அந்த வகையில், இன்று முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முகமது ஷமியின் சாதனைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் சொந்த ஊரான சகஸ்பூர் அலி நகர் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்திருந்ததாகத் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.