Advertisment

228 ரன் வித்தியாசத்தில் பாக், வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

India won by defeating Pakistan by 228 runs!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டம் ஞாயிறு (11-09-2023) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் பேட்டிங்கின் பாதியிலேயே, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரிசர்வ் நாளான நேற்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகிவிட்டது என அறிவிப்பது போல இருந்தது நேற்றைய ஆட்டம்.

Advertisment

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023ன் சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது ஆட்டம் ஞாயிறு (11-09-2023)அன்றுஇந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்னில் வெளியேறினார். பின்னர் ராகுல்-கோலி கூட்டணி களமிறங்கிவிளையாடியது. இருப்பினும், ஆட்டம் மழையினால் நின்றதை அடுத்து நேற்று ரிசர்வ் நாளில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்த நிலையில், ஞாயிறு ஆட்டத்தில் 24.1 ஓவரில் இந்திய அணி 147 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது. விராத் கோலி 8 ரன்களுடனும், ராகுல் 17 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

Advertisment

நேற்று ரிசர்வ் நாளில் இருவரும் களமிறங்கினர் . தொடக்கத்தில் இருந்தே வலுவான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்த பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். ஒரு முனையில் விராத் கோலி அடித்து ஆட, ராகுலும் இணைந்து பந்துகளை பறக்க விட்டார். பாகிஸ்தான் பவுலர்களும் முழு பலம் கொண்டு பந்து வீசினாலும் ராகுலும், கோலியும் அசரவில்லை. நேற்றைய ரிசர்வ் நாள் ஆட்டத்தில் விக்கெட்டை இழக்காமல் இந்தியா 50 ஓவர் வரை முழுமையாக விளையாடியது. கே.எல். ராகுல் 106 பந்தில் 111 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். இதில்,12 பவுண்டரிகள், 2 சிக்ஸர் என மிகவும் சிறப்பாக விளையாடினார். இதுவரை கே.எல்.ராகுல் ஒரு நாள் போட்டியில் விளையாடியதிலேயே மிக அற்புதமான ஆட்டம் இது. இதில் குறிப்பிட வேண்டியது, அவர் சமீபத்தில் தான் சிகிச்சையில் இருந்து வந்தார். இவரைத் தொடர்ந்து, விராத் கோலியும் தனது 47வது ஒரு நாள் போட்டி சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக விளையாடிய அவர் 94 பந்துகளை எதிர்கொண்டு 122 ரன்கள் எடுத்தார். மூன்று பெரிய சிக்சர்களுடன், 9 பவுண்டரிகளும் அதில் அடங்கும். மேலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையும் படைத்தார். இருவரும் இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் விளையாடினர். இதனால், இந்திய அணி 50 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது.

எனவே, 357 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பக்கர் சமான் - இமாம் உல் ஹக் விளையாடினர். மிகப் பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் பாகிஸ்தான் தொடக்கம் முதல் அடித்து ஆட வேண்டிய சூழல்உருவாகியது. இருப்பினும், ஆட்டத்தை மெதுவாக நகர்த்தியது பாகிஸ்தான் அணி. இமாம் உல் ஹக் 9 ரன்னில் பும்ரா வீசிய பந்தில் வெளியேறினார். குறிப்பாக, இந்தியாவின் பந்து வீச்சும் நேற்று சிறப்பாக இருந்தது. இதனால், கேப்டன் பாபர் அசாம் 10, முகமது ரிஸ்வான் 2 ரன் என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர், 47 ரன்களில் 3 விக்கெட் இழந்து பாகிஸ்தான் தடுமாறத் தொடங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் பாகிஸ்தான் அணி மீண்டு வரவே முடியாத சூழல் உருவானது. இதற்கு காரணம், குல்தீப் யாதவ் வீசிய சுழற்பந்துகள் தான். அவர் 8 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் 31.6 வது ஓவரில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகளுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

பாகிஸ்தானின் நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் இருவருக்கும் ஏற்பட்ட காயத்தால் களமிறங்கவில்லை. எனவே பாகிஸ்தான் ஆல்-அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்தியா பவுலிங்கில், பாண்டியா, பும்ரா, ஷர்துல் தலா 1 விக்கெட் எடுத்தனர். நேற்றைய ஆட்ட நாயகன் விருதை 122 ரன்கள் எடுத்த விராத் கோலி பெற்றார். இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது. இதன் மூலம் சூப்பர் 4 பட்டியலில் முதல் இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

நேற்றைய ஆட்டம், இந்திய உலகக் கோப்பை அணியை பற்றி எழுந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகவும் இருந்தது. மேலும், உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடம் கடத்தியுள்ளது.நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம், பிரேமதாச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு தொடங்கும்.

Pakistan India cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe