Advertisment

ஆறுதல் வெற்றிபெற்ற இந்தியா!

team india

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisment

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே முதற்கட்டமாக ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது. இதனையடுத்து, மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பெர்ராவில் நடைபெற்றது.

Advertisment

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக தவான் மற்றும் கில் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 26 ரன்களாக உயர்ந்த போது தவான் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழ, 31.5 ஓவர்களில் 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அணியின் ஸ்கோர் 200-ஐ நெருங்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலையில், ஆறாவது விக்கெட்டிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இணைந்தனர்.

ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை எளிமையாகச்சமாளித்து அதிரடி காட்டிய இந்த இணை, 50 ஓவரின் முடிவில் அணியின் ஸ்கோரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302-ஆக உயர்த்தியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 66 ரன்களும் எடுத்தனர். ஆறாவது விக்கெட்டிற்கு கைகோர்த்த இந்த இணை 108 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 150 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. துவக்க வீரர் மார்னஸ் லாபுசாக்னே விக்கெட்டை, அறிமுக வீரர் நடராஜன் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். கடந்த இரு போட்டிகளிலும் அசத்திய ஸ்மித் விக்கெட்டை இளம் வீரர் தாக்கூர் வீழ்த்த ஆஸ்திரேலிய அணி ஆட்டம் காணத் தொடங்கியது. 7-ஆவது வீரராகக் களம்கண்ட மேக்ஸ்வெல் அதிரடி காட்ட, போட்டியில் சற்று பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பின் அவரது விக்கெட்டை பும்ரா வீழ்த்த, இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. பின் வரிசை வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரின் முடிவில் 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தாக்கூர் 3 விக்கெட்டுகளும், பும்ரா, நடராஜன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

cnc

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி பறிகொடுத்த போதிலும், இன்றைய போட்டியில் பெற்ற ஆறுதல் வெற்றி இந்திய வீரர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றி அடுத்து வரவிருக்கிற 20 ஓவர் தொடரிலும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

india vs Australia
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe