Skip to main content

ஆலோசகராக தோனி... இந்திய அணியை சீண்டிய முன்னாள் பாக். வீரர்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

MS DHONI WITH TEAM INDIA

 

2021ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் வரும் 24ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

 

இந்தநிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது தொடர்பாக இந்திய அணியை சீண்டியுள்ளார். அணி அழுத்தத்தில் இருப்பதாலேயே தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, “காகிதத்தில் பார்க்கும்போதும், அவர்கள் உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாடிய விதத்தை வைத்து பார்க்கும்போதும் இந்தியா சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீங்கள் சமீபத்திய செயற்பாடுகளைப் பார்க்க வேண்டும். முதலில், நான் விராட் கோலியை பற்றி பேச விரும்புகிறேன். அவர் மிகுந்த அழுத்தத்தில் இருந்தார். தனது டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். ‘எனது ஆட்டம் சிறப்பாக இல்லாததால் நான் டி20களில் கேப்டனாக இருக்கமாட்டேன்’ என அவர் தெரிவித்தார்.

 

அவர்கள் (இந்திய அணி) அழுத்தத்தில் இருக்கலாம். அதனால்தான் அவர்கள் தோனியை ஆலோசகராக ஆக்கியுள்ளார்கள். நீங்கள் ஐபிஎல் தொடரைப் பார்த்தாலும், இந்திய அணியில் உள்ள வீரர்கள் முதல் 10 சிறந்த செயற்பாடு பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை. எனவே நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.”

இவ்வாறு  தன்வீர் அகமது கூறியுள்ளார். 

 

 

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்