ADVERTISEMENT

Ind vs NZ: தோனியின் சாதனையை சமன் செய்வாரா கில்?

10:55 AM Oct 22, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகக் கோப்பையின் 21வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தரம்சாலாவில் இன்று நடைபெற உள்ளது.

இரு அணிகளும் வலிமை வாய்ந்த அணிகள் என்பதால் இந்த ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 116 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 58 முறையும் நியூசிலாந்து அணி 50 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஏழு முறை போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. ஒரு முறை ஆட்டம் டையில் முடிந்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருக்க, உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் வரலாறு சற்றே கவலைக்குரிய நிலையில் உள்ளது. உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எட்டு முறை மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 5 முறையும் இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

முக்கியமாக கடந்த 2019 உலகக்கோப்பையை இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்திய அணி கட்டாயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனியின் ரன் அவுட் இந்திய ரசிகர்களுக்கு பெரும் இடியாக அமைந்தது. எனவே, கடந்த உலகக் கோப்பையில் பெற்ற தோல்விக்கு பதிலடி தரும் வகையில், இன்று இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு காட்டும்.

இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. எனவே ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அஷ்வினா அல்லது சூரிய குமாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கில் இன்று சிறப்பாக விளையாடினால், ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்தைப் பிடிக்க முடியும். கடந்த ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் போட்டியில் பாபர் அசாம் 9 ரன்கள் அல்லது அதற்கும் குறைவாக எடுத்திருந்தால் சுப்மன் கில் ஒரு நாள் போட்டி தரவரிசைகளில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து தோனியின் சாதனையை ( 38 ஒரு நாள் போட்டிகள்) முந்தி 37 ஒரு நாள் போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் இந்த சாதனையை செய்த இந்திய வீரராக மாறி இருப்பார். எனவே இன்றைய ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடி தோனியின் சாதனையை சமன் செய்து ஒரு நாள் போட்டி தரவரிசைகளில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த உலக இந்த உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டி நடைபெறும் தரம்சாலா மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எனவே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கூடுதல் சுதாரிப்புடன் விளையாடினால், இந்திய அணி எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மேலும் நியூசிலாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளதால், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் இடம்பெற்றால், இந்திய அணிக்கு அது கூடுதல் பலமாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெ.அருண்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT