Advertisment

மீண்டும் ஒரு ஐசிசி கோப்பை; தொடரும் மஞ்சள் படையின் ஆதிக்கம்!

An ICC trophy again; The continued dominance of the yellow army!

Advertisment

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் வில்லோமூரே பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கொன்ஸ்டாஸ் ரன் ஏதும் எடுக்காமல் இந்திய அணியின் லிம்பானியின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கேப்டன் வெய்ப்கென் உடன் சேர்ந்து டிக்சன் நிதானமாக ஆடத் தொடங்கினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் வெய்ப்கென் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். டிக்சனின் 42, ஹர்ஜாஸ் சிங்கின் 55, ஆலிவர் பீக்கின் 46 ரன்கள் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் லிம்பானி 3 விக்கெட்டுகளும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளும், சாவ்மி, முக்‌ஷீர் கான் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அர்ஷினை ஆரம்பத்திலேயே 3 ரன்னில்வெளியேற்றி ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட் முஷீர் கானும் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமற்றினார். அடுத்து வந்த கேப்டன் சஹரனும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அரையிறுதியில் சிறப்பாக ஆடிய சச்சின் தாஸ் 9 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த மோலிய 9 ரன்களுக்கும், அவனிஷ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுபக்கம் பொறுமையாக ஆடிய ஆதர்ஷ் சிங் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் அபிஷேக் மட்டும் 42 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸி.யின் பீடர்மேன், மேக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளும், விட்லர் 2 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் மற்றும் ஸ்ட்ரேக்கர் தலாஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ஆவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளது.பீடர்மேன் ஆட்டநாயகனாகவும், மாபகா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2021 முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள ஐசிசி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022 டி20 உலகக்கோப்பையை இங்கிலந்து அணி வென்றது. அதைத் தவிர்த்து 2021 டி20 கோப்பை, 2022 மகளிர் டி20 கோப்பை, 2023 மகளிர் உலகக்கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஆண்கள் உலகக்கோப்பை தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை என 6 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2023 இல் 3 ஐசிசி கோப்பைகள், 2024இல் தற்போது என தொடர்ச்சியாக 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது.

Advertisment

ஆஸ்திரேலிய அணி 1999 ஸ்டீவ் வாக் கேப்டன்சியில் இருந்து 2007 ரிக்கி பாண்டிங் கேப்டன்சி வரை தொடர்ச்சியாக 3 உலகக்கோப்பைகளை வென்றிருந்தது. ஒரு பத்தாண்டுகளுக்கும் மேல் அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது. பின்னர் இந்திய அணியில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் ஆஸ்திரேலிய அணியின் சாம்ராஜ்யம் சற்றே ஆட்டம் கண்டது. அதன் முதல் படியாக 2007 இல் டி20 அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் அடி கொடுத்த்து. 2008இல் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் நடந்த காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரின் மூன்று இறுதி ஆட்டங்களில் இரண்டை வென்று ஆஸ்திரேலியாவின் வெற்றி சாம்ராஜ்யத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தது. 2011 உலகக்கோப்பை காலிறுதி என மூன்று முக்கிய ஐசிசி போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சாய்த்தது. 2019 உலகக்கோப்பையில் ஆஸி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்திய அணியின் கேப்டசியில் இருந்து தோனி விலகியதில் இருந்து ஆஸ்திரேலிய அணி மீண்டும் எழத் தொடங்கியது. இந்திய அணிக்கு கோலி, ரோஹித் என கேப்டன்களை மாற்றி மாற்றியும் ஐசிசி தொடர்களில் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது 4 ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி விஸ்வரூபம் எடுத்து வெற்றிகளைக் குவித்து தோற்கடிக்க முடியாத அணி எனும் அந்த பழைய பெயரை மீண்டும் பெற்றுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நேற்றைய மேற்கு இந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் மேக்ஸ்வெல் 5 ஆவது முறையாக சதமடித்து டி20 போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் ரோஹித்தின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வெ.அருண்குமார்

Australia cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe