'ICC should remove India' Captain Paichal in front of Pakistan

Advertisment

இந்திய அணியை ஐசிசி நீக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதம் நடக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தியா பாகிஸ்தான் உறவுசீராக இல்லாததால், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல முடியாத காரணத்தால், இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும் ஆசிய கிரிக்கெட் வாரிய தலைவருமான ஜெய்ஷா கூறினார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது.

சில தினங்கள் முன் நடந்த ஆசியகிரிக்கெட் நிர்வாகிகள் கூட்டத்தில், பாகிஸ்தானில் சென்று விளையாட முடியாது என இந்தியாவும், எங்கள் நாட்டில் தான் ஆசியக் கோப்பை தொடரை நடத்த வேண்டும் என பாகிஸ்தானும் உறுதியாக இருந்த காரணத்தால் மீண்டும் அடுத்த மாதம் இது குறித்து விவாதிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து கூறிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியதலைவர் நஜிம் சேத்தி, “ஆசியக் கோப்பை தொடர் பல அணிகளும் பங்கேற்கும் தொடர். இதில் கலந்து கொள்ள வரும் இந்திய அணிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுக்கு அணியை அனுப்பாவிட்டால் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்லாது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட், “இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை. எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. இது போன்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்துவது ஐ.சி.சி.யின் வேலை. ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு ஒரு அணி செல்ல மறுத்தால் அவர்களை ஐ.சி.சி. நீக்க வேண்டும்.

பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி பாகிஸ்தானுடன் தோற்றால் அவர்களை இந்திய ரசிகர்கள் எளிதில் விடமாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே விளைவுகளைப் பற்றி அவர்கள் பயப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் ஐ.சி.சி தலையிட்டு இந்திய அணி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.