ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் மிகச்சிறப்பாக நடந்துமுடிந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு களமிறங்கிய சென்னை அணி கோப்பையை வென்றிருக்கிறது. கிட்டத்தட்ட ஐம்பது நாட்களாக நடந்த இந்தத் தொடரில், பல வீரர்களின் அசத்தலான திறமைகள் வெளிவந்திருக்கின்றன. அதில் மிகவும் குறிப்பாக பலரது கவனத்தையும் ஈர்த்தவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஷீத்கான்.

Advertisment

Rashid

இந்தத் தொடரின் தொடக்கத்தில் இருந்தே அற்புதமாக விளையாடி வந்த ரஷீத்கான், ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முக்கியக்காரணமாக இருந்தார். இறுதிப்போட்டிக்கு முந்தைய இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் வெறும் 10 பந்துகளையே எதிர்கொண்ட ரஷீத்கான் 34 ரன்கள் குவித்தார். நான்கு சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அதில் அடக்கம். பேட்டிங்கில் கலக்கிய ரஷீத், பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெறும் 19 ரன்களே அவர் கொடுக்க, அன்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார்.

Advertisment

இந்நிலையில், ரஷீத்கானின் இந்த அதிரடி ஆட்டம் குறித்து, கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் ஆராதிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர், ‘ரஷீத்கான் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று எப்போதும் நினைப்பேன். ஆனால், டி20 ஃபார்மேட்டில் உலகிலேயே மிகச்சிறந்த வீரர் அவர்தான் என்பதை இனிமேலும் சொல்ல தயங்கக்கூடாது என்றே நினைக்கிறேன். நினைவிற்கொள்ளுங்கள்.. அவர் சிறந்த பேட்ஸ்மெனும் கூட’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

சச்சின் தெண்டுல்கரின் இந்த ட்வீட் குறித்து ரஷீத்கான், ‘நான் பேருந்தில் ஏறி அமர்ந்தபோது, என் நண்பன் தெண்டுல்கரின் ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து எனக்கு அனுப்பிவைத்தான். அதைக் கண்டதும் நான் அசந்துபோனேன். அந்த ட்வீட்டிற்கு ரிப்ளை செய்ய கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் எடுத்துக்கொண்டேன்’ என தெரிவித்துள்ளார். உலகத்தரம்வாய்ந்த சச்சின் போன்ற வீரர்களின் பாராட்டு, என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.