ADVERTISEMENT

வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? - பிசிசிஐ தலைவர் கங்குலி பதில்!

02:22 PM May 06, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹா, டெல்லி கேபிட்டல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கரோனா உறுதியானது. மேலும், சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி ஆகியோருக்கும் கரோனா உறுதியானது.

இதையடுத்து, பாதுகாப்பு வளையத்தை மீறி, வீரர்களுக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்த கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார். தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரிடம் பாதுகாப்பு வளையத்தை வீரர்கள் மீறினார்களா? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கங்குலி, "நான் அப்படி நினைக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த அறிக்கைப்படி வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்தை மீறவில்லை. இது (வீரர்களுக்கு கரோனா ஏற்பட்டது) எப்படி நடந்தது என்பதைக் கூறுவது கடினமான ஒன்று. நாட்டில் எப்படி இத்தனை அதிகமான மக்கள், கரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கூறுவது கடினமானது" என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, உலகம் முழுவதுமுள்ள பாதுக்காப்பு வளையத்தை உருவாக்கும் தொழில் வல்லுநர்களால் கூட, பாதுகாப்பு வளையத்திற்குள் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறிய கங்குலி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் (இங்கிலாந்தின் கால்பந்தாட்ட தொடர்) நடைபெற்றபோது, சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த கங்குலி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகள் ஆறு மாத காலம் நடைபெறும் என்பதால், அவர்களால் அப்படி செய்ய முடிந்தது. ஆனால், நமக்கான கால அவகாசம் குறைவானது. நாம் வீரர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும். அதனால் மீண்டும் போட்டிகளை நடத்துவது கடினமானது" என கூறியுள்ளார்.

மேலும் கங்குலி, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் (கடந்த ஆண்டை போலவே) நடத்த ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆனால் அப்போது இந்தியாவில் இந்தளவிற்கு கரோனா பரவல் இல்லை என்பதால் இந்தியாவிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT