Skip to main content

மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய அணியின் கேப்டன் மறைவு...

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

hockey legend balbir singh passed away

 

மூன்று ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியாவின் மிகச் சிறந்த ஹாக்கி வீரர்களில் ஒருவரான பல்பீர் சிங் இன்று உயிரிழந்தார். 

1956 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகச் செயல்பட்டு இந்திய அணிக்குத் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத்தந்த பல்பீர் சிங், கடந்த இரு வாரங்களாக உடல்நிலை சரியில்லாததால் சண்டிகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். கடந்த மே 18 முதல் அரை கோமா நிலையிலிருந்த பல்பீர் சிங்கிற்கு அதிக காய்ச்சலுடன் நிமோனியா ஏற்பட்டதோடு, மூளையில் இரத்த உறைவு, மூன்று முறை மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இன்று அவர் உடல்நிலை மோசமாகி இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இவரது மகன்கள் கனடாவில் வசித்துவரும் நிலையில், தனது மகளுடன் சண்டிகரில் வசித்து வந்தார் பல்பீர் சிங். 
 


96 வயதான பல்பீர் சிங், நவீன ஒலிம்பிக் வரலாற்றில் சர்வதேச ஒலிம்பிக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரேயொரு இந்தியர் ஆவார். அதுமட்டுமல்லாமல், ஒலிம்பிக்கின் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் ஒரு நபர் அடித்த பெரும்பாலான கோல்களுக்கான உலக சாதனை இன்னும் இவர் வசமே உள்ளது. லண்டன் (1948), ஹெல்சிங்கி (1952) ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வென்ற இவர், மெல்பேர்ன் (1956) ஒலிம்பிக்கில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று மீண்டும் இந்திய அணிக்குத் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்த என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

காமன்வெல்த் போட்டியில் இருந்து இந்திய ஹாக்கி அணிகள் விலகல் - இங்கிலாந்திற்கு பதிலடி நடவடிக்கை?

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

hockey india

 

2022ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய ஹாக்கி அணிகள் அந்த காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்காது என ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும் இடையே 32 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஹாக்கி இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்சுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் என்பதால், அந்த போட்டிகளுக்கு முன்பாக ஐரோப்பாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திற்கு வீரர்களை அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.

 

ஆனால், இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஆடவருக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியிலிருந்து வெளியேறுவதாக இங்கிலாந்து அணி சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. கரோனா தொடர்பான கவலையையும், இங்கிலாந்து நாட்டவரை 10 நாட்கள் தனிமைப்படுத்தும் இந்திய அரசின் விதியையும் இந்த ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியிலிருந்து விலகுவதற்கான காரணமாக தெரிவித்திருந்தது.

 

இதற்குப் பதிலடி தரும் வகையிலயே காமன்வெல்த் போட்டிகளிலிருந்து இந்திய ஹாக்கி அணிகள் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Next Story

"ஹாக்கி வீராங்கனை வந்தனாவுக்கு புதிய பதவி" - உத்தரகாண்ட் முதல்வர் அறிவிப்பு!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

vandana katariya

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில், காலிறுதிக்குக் கூட செல்லாது எனக் கூறப்பட்ட இந்திய மகளிர் அணி அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தது. மகளிர் அணியின் இந்த சாதனையில் முக்கிய பங்காற்றியவர் வந்தனா கட்டாரியா. மேலும், இந்த ஒலிம்பிக்கில் அவர் ஹாட்ரிக் கோல் அடித்ததின் மூலம், ஒலிம்பிக்ஸில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

 

இதனையடுத்து வந்தனாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கிடையே வந்தனாவை பாராட்டி, அவரது சொந்த மாநிலமான உத்தரகாண்ட்டின் மாநில அரசு, அவருக்கு 25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தது.

 

இந்நிலையில், தற்போது உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, வந்தனாவை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள்  மேம்பாட்டுத் துறையின் தூதுவராக நியமித்துள்ளார். இதற்கு முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே, வந்தனாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.