Skip to main content

மும்பை தாக்குதலுக்கு பிறகு இங்கிலாந்து அணி செய்ததை மறந்துவிடக்கூடாது! - சுனில் கவாஸ்கர்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

gavaskar

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்த நிலையில், இந்திய அணியின் உதவியாளருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், இரு அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இரத்தான போட்டியைத் திரும்ப நடத்த இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

 

இந்தநிலையில், 2008 மும்பை தாக்குதலின்போது, பாதி தொடரில் நாட்டிற்கு திரும்பிய இங்கிலாந்து அணி, மீண்டும் இந்தியாவிற்கு விளையாட வந்ததைச் சுட்டிக்காட்டிய சுனில் கவாஸ்கர், அதை இந்திய அணி எப்போதும் மறக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "2008ஆம் ஆண்டின் கொடூரமான தாக்குதல்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணி திரும்ப விளையாட வந்தது என்பதை இந்தியர்களாகிய நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. திரும்பி வர முடியாது என கூற அவர்களுக்கு முழு உரிமை இருந்தது. எனவே கெவின் பீட்டர்சன் அந்த அணியை வழிநடத்தினார் என்பதையும், அவர்தான் அணியின் முக்கியமான மனிதர் என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. பீட்டர்சன் நான் போக விரும்பவில்லை என கூறியிருந்தால் அதுவே தொடரின் முடிவாக இருந்திருக்கும். பீட்டர்சன் மற்றவர்களை சமாதானப்படுத்தியதால்தான் அணியில் இருந்த மற்றவர்களும் வந்தார்கள். சென்னையில் அருமையான டெஸ்ட் போட்டி நடந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அந்த செயலை நினைவில்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

கவாஸ்கரின் வேண்டுகோளும் தோனியின் செயலும்; சேப்பாக்கத்தில் நெகிழ்ச்சி

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

sunil kavaskar asked dhoni autograph chepauk stadium 

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 61 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் நேற்று முன்தினம் (14.05.2023) மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 144 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்களையும் டிவோன் கான்வே 30 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் தலா 2 விக்கெட்களையும் வைபவ் அரோரா, ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 145 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 147 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நிதிஷ் ரானா 57 ரன்களையும் ரிங்கு சிங் 54 ரன்களையும் எடுத்தனர். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டார்.

 

மேலும் இந்த போட்டியானது சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் களம் இறங்கும் கடைசி லீக் போட்டியாகவும் அமைந்தது. இந்நிலையில் போட்டி முடிவடைந்த நிலையில் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனியும், சென்னை அணியைச் சேர்ந்த மற்ற வீரர்களும் சென்னை அணியின் கொடியை கைகளில் ஏந்தியவாறு மைதானத்தை சுற்றிலும் வலம் வந்து கிரிக்கெட் பந்துகளை ரசிகர்களுக்கு வழங்கி அங்கிருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

 

sunil kavaskar asked dhoni autograph chepauk stadium 

 

அப்போது மைதானத்தில் போட்டி குறித்து வர்ணித்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் திடீரென சற்று தூரத்தில் இருந்து ஓடி வந்து தோனியிடம் தனது சட்டையில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டார். அதனைத் தொடர்ந்து தோனியும் அவரது சட்டையில் ஆட்டோகிராப் போட்டார். அதன் பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். இவர்களின் இந்த செயலானது போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

“ரோஹித் சர்மா ஓய்வு எடுக்க வேண்டும்” - சுனில் கவாஸ்கர் 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

“Rohit Sharma should take a break” - Sunil Gavaskar

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 35ஆவது லீக் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கில் 56 ரன்களையும் மில்லர் 46 ரன்களையும் அபினவ் மனோகர் 42 ரன்களையும் எடுத்தனர். மும்பை அணியில் சாவ்லா 3 விக்கெட்களையும் அர்ஜுன் டெண்டுல்கர், பெஹ்ரெண்ட்ராஃப், மெரிட்ரித் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் 207 ரன்களை குவித்ததன் மூலம் குஜராத் அணி தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன்பு கொல்கத்தா அணிக்கெதிராக 204 ரன்களை குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த போட்டியில் குஜராத் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 77 ரன்களை குவித்திருந்தது.

 

208 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து திணறியது. இறுதியில் வதேரா கொஞ்சம் ரன்களை அடிக்க மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

 

இந்த போட்டியில் மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இது அந்த அணிக்கு இரண்டாவது முறை. முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிராக 29 ரன்களை எடுத்திருந்தது. முதல் இடத்தில் குஜராத்திற்கு எதிராக ராஜஸ்தான் அணி 26 ரன்களை எடுத்திருந்ததே குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. 

 

“Rohit Sharma should take a break” - Sunil Gavaskar

 

நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3ல் மற்றுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 7 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ரோஹித் சர்மா 182 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 65 ரன்களை எடுத்துள்ளார். 

 

இதுகுறித்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். உண்மையாகவே, ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஓய்வின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் இருக்க முடியும். ரோஹித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி சில போட்டிகளில் வேண்டுமானால் மீண்டும் விளையாட வரலாம். ஆனால், இப்போதைக்கு அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

அவர் தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து யோசித்துக் கொண்டிருக்கக் கூடும். எனக்குத் தெரியவில்லை. எனக்கு தெரிந்து அவருக்கு இச்சமயத்தில் சிறிது ஓய்வு வேண்டும் என நம்புகிறேன். அவர் இறுதி மூன்று அல்லது 4 போட்டிகளில் மீண்டும் விளையாட வேண்டும் அப்போது அவருக்கு உலகக் கோப்பைக்கான ஒரு நிலைத்தன்மை கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.

 

மும்பை அணி அடுத்து ராஜஸ்தான் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுடனான இரு தோல்விக்குப் பின் ராஜஸ்தான் அணியுடன் வரும் ஏப்ரல் 30ல் மோதுவதால் அப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.