Skip to main content

சென்னை அணிக்கும் தோனிக்கும் இடையேயான உறவு குறித்து கவுதம் காம்பீர் பேச்சு!

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

Dhoni

 

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13 -ஆவது ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி, தொடர் தோல்விகளால் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 4 வெற்றிகள், 8 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும், அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து, முதல் சுற்றிலேயே சென்னை அணி வெளியேறியது இதுவே முதல் முறையாகும். தோனியின் ஆட்டம் மற்றும் அணியை வழிநடத்தும் திறன் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்தது. சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன், அடுத்த ஆண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார் என விளக்கம் அளித்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், சென்னை அணி மற்றும் தோனிக்கு இடையேயான உறவு குறித்துப் பேசியுள்ளார்.

 

அதில் அவர், "சென்னை அணி சென்னை மாதிரியே இருக்கிறது என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பதற்கான காரணம், தோனிக்கும், அணியின் உரிமையாளருக்கும் நெருக்கமான உறவு இருப்பதுதான். சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையை அவர்கள் தோனிக்கு வழங்கியுள்ளனர். பரஸ்பர மரியாதையையும் அணி உரிமையாளர்கள் தோனிக்கு கொடுக்கிறார்கள். அணி நிர்வாகத்தினரின் இத்தகைய மரியாதைகளுக்கு தோனி தகுதியானவரே. எனவே 2021-ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு தோனியே கேப்டனாக தொடர்வார் என்பதில் எனக்கு வியப்பேதும் இல்லை" எனக் கூறினார்.

 

 

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.