Skip to main content

ராகுல் டிராவிட் விட்டுச் சென்ற பொறுப்பு... முன்னாள் வீரரை களமிறக்கும் முயற்சியில் கங்குலி!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

ganguly -dravid

 

இந்திய அணியின் தலைமை பயிற்சியளராக ராகுல் ட்ராவிட் நியமிக்கப்படவுள்ளார் என அண்மைக்காலமாக தொடர்ந்து தகவல் வெளியாகிவந்த நிலையில், அண்மையில் பிசிசிஐ ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

 

இந்தநிலையில், ராகுல் டிராவிட் வகித்துவந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநர் யார் என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தப் பொறுப்பிற்கு வி.வி.எஸ். லட்சுமணனை நியமிக்க பிசிசிஐ விரும்பியதாகவும், ஆனால் லட்சுமணன் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில் பிசிசிஐயின் அதிகாரபூர்வ வட்டாரங்கள், வி.வி.எஸ். லட்சுமணனை தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக நியமிக்க முயற்சிகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளன. பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருவரும் வி.வி.எஸ். லட்சுமணன் அப்பொறுப்பை ஏற்க வேண்டும் என விரும்புவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

அதேநேரத்தில் இதுதொடர்பான இறுதி முடிவை வி.வி.எஸ். லட்சுமணன்தான் எடுக்க வேண்டும் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கையா? விளக்கமளித்த டிராவிட்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Disciplinary action against Ishan Kishan? Explained by Dravid

இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் இஷான் கிஷன். உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர், பிறகு கில் வந்ததாலும், அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் செயல்பட்டதாலும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், டெஸ்ட் போட்டிகளுக்கு முன் மனச்சோர்வு காரணமாக சிறிது காலம் ஓய்வு தேவைப்படுவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் கீப்பராக செயல்படுவதால் தனக்கு இடம் கிடைக்காது என்பதாலும், தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டு வருவதாலும் ஓய்வு எடுத்தார் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தது.

தற்போது, சஞ்சு சாம்சன் கீப்பராக அணிக்கு திரும்பி இருப்பதாலும், ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி கீப்பராக செயல்படுவதாலும், அடுத்து ரிஷாப் பண்ட் உடல் தகுதி பெற்று விட்டால் அவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாலும், இனி அணிக்கு அணியில் தனக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால், அவர் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் கிளம்பியது.

இந்நிலையில், நாளை இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி மொகாலியில் தொடங்குகிறது. இதை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதல் டி20 போட்டியில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் எனவும், அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் விராட் கோலி களமிறங்குவார் எனவும் தெரிவித்தார். மேலும் ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய டிராவிட், ஸ்ரேயாஸ் அணியில் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தையும் விளக்கினார். அணியில் பல பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஸ்ரேயாஸை தேர்வு செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

அப்போது இஷான் கிஷன் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பயிற்சியாளர் டிராவிட், இஷான் கிஷனே இந்த அணி தேர்வுக்கு தன்னை கருத்தில் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், அவரேதான் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பு ஓய்வு கேட்டதால், அவரின் உணர்வுகளை மதித்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் விளக்கினார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய நிலைத்தன்மையை நிரூபித்தால், அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அணியில் சேர்க்க கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறினார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். 

- வெ. அருண்குமார்