Skip to main content

ஐபிஎல்-லில் இருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள்...

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

ஐபிஎல் தொடரில் விளையாடும் எட்டு அணிகளில் உள்ள ஒரு சில முக்கிய வெளிநாட்டு வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி மற்றும் சில சர்வதேச தொடர்கள் காரணமாக பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அணியின் வெற்றியை தீர்மானிப்பதில் அதிக பங்கு வகித்து வந்த சில வெளிநாட்டு வீரர்கள் விலகுவது அந்த அணிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

 

ipl

 

இங்கிலாந்து வீரர்கள் இந்த வாரம் தங்கள் நாடுகளுக்கு செல்லும் நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த வீரர்கள் மே முதல் வாரத்தில் கிளம்பவுள்ளனர். நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மட்டுமே இறுதி வரை விளையாடவுள்ளனர். மேலும் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற வெளிநாட்டு வீரர்கள் மற்றும்  உலகக்கோப்பை தொடரில் விளையாடாத சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடுவார்கள்.  
 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சர்வதேச முத்தரப்பு தொடர் இருந்தாலும், ஐபிஎல் விளையாடும் வீரர்கள் முத்தரப்பு தொடருக்கான தேசிய அணியில் இடம்பெறவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஐபிஎல் இறுதிப்போட்டி வரை விளையாடுவார்கள். இலங்கை அணியை பொறுத்தவரை மலிங்கா மட்டுமே விளையாடி வருகிறார். அவரும் கடைசி வரை விளையாட வாய்ப்புண்டு.
 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

விலகவுள்ள வீரர்கள்: டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ். 
மாற்று வீரர்கள்: மார்டின் கப்தில்,  சாஹா, முஹம்மது நபி. 
 

அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பான ஓபன்னிங் பார்ட்னர்ஷிப் தந்துள்ளனர். இந்த தொடரில் வார்னர் 574 ரன்கள், சராசரி 71.75 மற்றும் பைர்ஸ்டோவ் 445 ரன்கள், சராசரி 55.62 வைத்துள்ளனர். பைர்ஸ்டோவ் சென்னை அணியுடனான போட்டியுடன் விலகியுள்ள நிலையில் வார்னர் இன்னும் இரு போட்டிகள் மட்டுமே விளையாடுவார். சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த இருவரும் விலகுவது பெரும் பாதிப்பாக இருக்கும். மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ள சன்ரைசர்ஸ் அணிக்கு பலமே ஒப்பனிங் தான். ஃப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெரும் நிலையில் உள்ள சன்ரைசர்ஸ் அணி இருவரின் இழப்பை சரிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
 

ராஜஸ்தான் ராயல்ஸ்:

விலகவுள்ள வீரர்கள்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.  
மாற்று வீரர்கள்: ஆஷ்டன் டர்னர், லியாம் லிவிங்ஸ்டோன், சோதி மற்றும் ஓஷேன் தாமஸ்.
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர்,  பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற நட்சத்திர வீரர்கள் விலகுவது அந்த அணிக்கு பெரும் அடியாக அமையும். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்னும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான், அயர்லாந்து தொடரில் மே முதல் வாரம் விளையாடவுள்ளனர். ஓரளவுக்கு ஃப்ளே ஆப் வாய்ப்புள்ள ராஜஸ்தான் அணிக்கு முக்கிய வீரர்கள் செல்வது மேலும் பலவீனமாக்கும். பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்த அணியின் காம்பினேசனையும் சரி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  
 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விலகவுள்ள வீரர்கள்: டேல் ஸ்டெயின், மொயின் அலி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெய்ன்ரிக் க்ளாசென். 
மாற்று வீரர்கள்: டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி. 
 

தொடர் வெற்றிகளை குவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மொயின் அலி, டேல் ஸ்டெயின், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் செல்லவிருப்பது சற்று ஏமாற்றமளிக்கிறது. தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூர் அணி ஸ்டெயின் வந்த பிறகு வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
 

சென்னை சூப்பர் கிங்ஸ்:

விலகவுள்ள வீரர்கள்: டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர்.
மாற்று வீரர்கள்: சாம் பில்லிங்ஸ். முரளி விஜய்.
 

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் செல்லவிருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஸ்பின் மற்றும் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாக விளையாடி வரும் இருவரும் செல்லும் நிலையில் மாற்று வீரர்கள் ஃபார்ம் இல்லாமல் இருப்பது சென்னை அணிக்கு சவாலான ஒன்று தான். 
 

டெல்லி கேபிடல்ஸ்:

விலகவுள்ள வீரர்கள்: ரபாடா.
மாற்று வீரர்கள்: ட்ரென்ட் போல்ட்.
 

இளம் கேப்டன், இளம் வீரர்கள் கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியில் முக்கிய பந்து வீச்சாளர் ரபாடா விலகுவது ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பலவீனமாக்கும். இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரபாடா விலகுவது டெல்லி அணிக்கு ஏமாற்றமளிக்கும். ரபாடாவின் இழப்பை சரி செய்யும் அளவிற்கு அந்த அணியில் வேறு வீரர் இல்லை என்பது முக்கியமான ஒன்று. 

 

மும்பை இந்தியன்ஸ்:

விலகவுள்ள வீரர்கள்: ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், குவின்டன் டி காக்.
மாற்று வீரர்கள்: எவின் லீவிஸ், மிட்செல் மெக்லெனகான், ஹென்ரிக்ஸ்.
 

மும்பை அணியில் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் மற்றும் சிறப்பாக ஒப்பனிங் அமைத்து தரும் குவின்டன் டி காக் ஆகியோர் செல்லவுள்ள நிலையில் அணிக்கு பலவீனமாக அமையுமா என்பது மாற்று வீரர்களின் ஆட்டத்தை பொறுத்தே உள்ளது. ஏறக்குறைய ஃப்ளேஆப் செல்லும் நிலையில் உள்ள மும்பை அணிக்கு சிறந்த ஒப்பனிங் இல்லாமல் போவது இனி வரும் போட்டிகளில் சவாலாக அமையும். 
 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

விலகவுள்ள வீரர்கள்: டேவிட் மில்லர். 
மாற்று வீரர்கள்: நிக்கோலஸ் பூரண், மோயஸ் ஹென்றிக்குஸ், கருண் நாயர். 
பஞ்சாப் அணியில் டேவிட் மில்லர் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங்கில் மில்லர் இழப்பை சரி செய்ய மாற்று சில வீரர்கள் உள்ளனர். 
 

 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

விலகவுள்ள வீரர்: ஜோ டென்லி. 
 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஜோ டென்லி பவுலிங்கில் பெரிய அளவில் அணிக்கு பங்களிக்கவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் கொல்கத்தாஅணிக்கு அதிகளவில் பாதிப்பு இருக்காது.
 

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கெயில், ரஸ்ஸல், பூரண், கார்லோஸ் ப்ராத்வேட், சிம்ரன் ஹெட்மியர் ஆகியோர் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். கெயில், ரஸ்ஸல் ஆகியோர் செல்லும் நிலை ஏற்ப்பட்டால் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணி பெரிய அளவில் பாதிக்கும். ஒரு வேளை ஃப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெரும் நிலையில் உள்ள இரு அணிகளுக்கும் இவர்களின் இடத்தை நிரப்பும் அளவிற்கு வேறு வீரர்கள் அணியில் இல்லை.

 

 

 

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.