Skip to main content

விளையாட்டின் போது உயிரிழந்த கால்பந்து வீரர்...சோகத்தில் ரசிகர்கள்...!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

ஆல் கேரளா செவன்ஸ் கால்பந்து சங்கம் சார்பாக கேரள மாநிலம் கொச்சியில் செவன்ஸ் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதன் நேற்றையப் போட்டியில் பெரிந்தல்மன்னா அணிக்கு திருச்சூர் அணிக்கும் இடையே நடைபெற்றது.

 

Football player incident

 

 

ஆட்டத்திற்கு நடுவே பெரிந்தல்மன்னா அணி வீரர் தனராஜன் ஆடுகளத்தில் கையை உயர்த்தியவாறு கீழே விழுந்தார். முதலுதவி செய்து விட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களிடேயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

Next Story

“ஒருமுறையாவது மணிப்பூருக்கு வாருங்கள்” - பிரதமருக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த வீரர்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
tearful plea to PM Modi and says Come to Manipur at least once

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் அரசுக்கு கடந்தாண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இதனையடுத்து, மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. இருந்த போதிலும், அங்கு சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில், குத்துச் சண்டை வீரர் ஒருவர், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா உள்விளையாட்டு அரங்கத்தில் MFN 14 (எம்.என்.எஃப்) நடத்தப்படும் தற்காப்பு கலை எனும் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கிடைக்கப்பெறும் சாம்பியன் பட்டத்திற்காக அறிமுக வீரர் முகமது ஃபர்ஹாத் மற்றும் மணிப்பூர் வீரரான சுங்ரெங் கோரன் ஆகியோர் போட்டியிட்டனர். 

இந்த போட்டியில், இறுதியாக சுங்ரெங் கோரன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். பட்டத்தை வென்ற பிறகு மணிப்பூர் வீரரான சுங்ரெங் கோரன், மணிப்பூரை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான வீடியோவில் அவர் பேசியதாவது, “இது எனது தாழ்மையான வேண்டுகோள். மணிப்பூரில் வன்முறை நடக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. மக்கள் உயிரிழந்து வருகின்றனர், பலர் நிவாரண முகாம்களில் உள்ளனர்.

இந்த நிவாரண முகாம்களில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே , தயவு செய்து மணிப்பூருக்கு ஒருமுறை சென்று மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பட்டம் வென்ற மணிப்பூர் வீரர், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி; சாதனை படைத்த அண்ணாமலை பல்கலைக்கழக அணி 

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Annamalai University's record-setting team at khelo India Games

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ - இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து அணி 2வது முறையாக வெற்றிபெற்றுள்ளது.

அசாம் மாநிலம் கவுஹாத்தில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ-இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கடந்த பிப்ரவரி 19 முதல் 29 வரை நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட  இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 8 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றனர். அந்த வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி, கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடியது.

இந்த கால்பந்து லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அதில், அரையிறுதி போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணியை, அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து. இறுதிப் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருநானக் தேவ்பல்கலைக்கழகம் அணியை (3-2) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கேலோ-இந்தியா போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Annamalai University's record-setting team at khelo India Games

வெற்றி பெற்ற கால்பந்து அணி வீராங்கனைகள் இன்று (01-03-24) மதியம் ரயில் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு  திரும்பினார்கள். அப்போது, சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த வீராங்கனைகளை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் அனைவருக்கும் மாலை அணிவித்து மேளதாளங்களுடன் வாழ்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்வில் உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜசேகரன், பொறியியல் புல முதன்மையர் கார்த்திகேயன், கல்வியியல் புல முதன்மையர் குலசேகர பெருமாள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஊழியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.