Skip to main content

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டம்; இந்திய அணி த்ரில் வெற்றி

Published on 17/10/2022 | Edited on 18/10/2022

 

First practice match against Australia; Indian team won by three

 

8 ஆவது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரும் 16ம் தேதி துவங்கி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 23ம் தேதி விளையாடுகிறது.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய மைதானங்கள் இந்திய வீரர்களில் பலருக்கு புதிது என்பதால் உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பே இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது. அங்கு மேற்கு ஆஸ்திரேலியாவுடன் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பயிற்சி போட்டியில் அதிர்ச்சி தோல்வி கண்டது.

 

இந்நிலையில் நேற்று பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர் கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி ரன்களை வேகமாக சேர்த்தார்.  33 பந்துகளில் 57 ரன்களை எடுத்து ராகுல் வெளியேறிய பின் கைகோர்த்த விராட் மற்றும் ரோஹித் ஜோடி பொறுமையாக ரன்களை சேர்த்தது. ரோஹித் 15 ரன்களில் ஆட்டமிழக்க பின் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி இலக்கை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 186 ரன்களை எடுத்தது.

 

இதன் பின் ஆட வந்த ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிரடியாக ஆடி 54 பந்துகளில் 76 ரன்களை குவித்தார். இருந்தும் பின் வந்த ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 

 

இறுதி ஓவரை வீசுவதற்காக ஷமி வந்தார். முதல் இரு பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த நான்கு பந்துகளிலும் ஆஸ்திரேலிய அணி விக்கெட்களை பறிகொடுத்தது. முடிவில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 180 ரன்களை மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில்  தோற்றது. 

 

கடைசி ஓவரில் ஷமி எடுத்த 3 விக்கெட்கள், ஒரு ரன் அவுட் மற்றும் 19 ஆவது ஓவரில் ஹர்ஷல் படேல் எடுத்த ஒரு விக்கெட் மற்றும் ஒரு ரன் அவுட் உட்பட கடைசி இரு ஓவர்களில் மட்டும் இந்திய அணி 6 விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

அதிக ரன் குவிப்பு; தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

KL Rahul broke Dhoni's record

 

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.  நேற்றைய ஆட்டம் இந்திய அணியிடம் இருந்து நழுவி செல்லும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தது. 

 

ஏனென்றால், 1.6 ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் என ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்கு 3 விக்கெட் சரிவில் இருந்து மீளுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, களத்தில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சற்று நம்பிக்கை தருவது போல இருந்தனர். இதன் பின், இருவரும் கைகோர்த்து நிதானமாக விளையாட இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி பயணித்தது. இதன் முடிவாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

 

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுடன் 6 பவுண்டரிகள் எடுத்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து களத்தில் நின்றார். என்னதான் செஞ்சுரியை தவறவிட்டாலும், கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதோடு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில், முதலிடத்தில் ராகுல் டிராவிட்- 145(இலங்கை எதிரணி), இரண்டாம் இடத்தில் எம்.எஸ்.தோனி - 91(இலங்கை எதிரணி) என இருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசியதன் மூலம் தோனியை பின்னுக்குத்தள்ளி கே.எல்.ராகுல் 2 ஆம் இடம்பிடித்துள்ளார்.  

 

 

Next Story

உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வி; இந்தியக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

 World Cup Pakistan Defeat; Conflict among Indian college students

 

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது. இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்றது. 

 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மற்றும் பிற மாநில மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

 

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள லாலா லஜபதிராய் மெமோரியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இங்கிலாந்துடன் தோற்ற நிலையில் இந்தத் தோல்வியை சில மாணவர்கள் கொண்டாடியதால் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பீகார் மற்றும் பிற மாநில மாணவர்கள் மதரீதியாகக் கோஷம் எழுப்பியதால் சண்டை வந்ததாக காஷ்மீர் மாணவர்கள் கூறினர். ஆனால் காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர், இதைக் கேட்ட ஹாஸ்டல் வார்டன் அவர்களது அறைக்குச் சென்று எச்சரித்தார். வார்டனை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்கள் அவரை மீட்கச் சென்றோம். அவர்கள் எங்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடிகளை வீசினர் என பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூறினர். 

 

இதனால் பதற்றமான சூழல் உருவானது. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவல்துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.