First ODI; Key players returning to Aussies; Can India cope?

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்திய நிலையில், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின்முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

Advertisment

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா தனது உறவினர் திருமணத்திற்கு சென்றதால் முதல் போட்டியை துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார். தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், சுப்மன் கில் விளையாடுவார்கள் என அவர் ஏற்கனவேஉறுதி செய்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் மீது திரும்பும் கவனத்தை அவர் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கோலி 3 போட்டிகளில் சதமடித்துள்ளார். அதேபோல் நடந்து முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியிலும் 186 ரன்களை குவித்து எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அவர் இன்றும் அசத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. பந்துவீச்சிலும் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் என அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்.

Advertisment

டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்வியை ஈடுசெய்ய ஒருநாள் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா முனைப்புடன் இருக்கிறது. டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டுஅணிக்கு மீண்டும் திரும்பியுள்ளது ஆஸி அணிக்கு மிகப்பெரிய பலம். பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அசத்தலாம்.

வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் உள்ள காரணத்தால் இன்று அதிரடிக்கும் ரன் மழைக்கும் பஞ்சம் இருக்காது. இருந்தாலும், போட்டியின் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சிற்கு கைகொடுக்கும் ஆடுகளம் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சிற்கு ஏற்றபடி மாறும் தன்மை கொண்டதால் விறுவிறுப்பிற்கு குறைவில்லாத சூழல் இன்று நிலவுகிறது.

Advertisment

இதுவரை வான்கடே மைதானத்தில் 22 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 11 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், மீதமுள்ள 11 போட்டிகளில் முதலில் பந்துவீசிய அணியும் வெற்றி பெற்றுள்ளன. வான்கடே மைதானத்தில் இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகளை விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.