Skip to main content

தோல்வியறியா போராட்ட  வீரன்..."நெவர் கிவ் அப்"பின் அர்த்தம் யுவராஜ்...

Published on 12/12/2020 | Edited on 12/12/2020
yuvraj singh

 

''இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும் ,எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் உன்ன எவனாலயும் எங்கேயும் எப்போதும் தோற்கடிக்க முடியாது'', திரையில் தல அஜித் பேசிய வரிகளுக்கு நிஜத்தில் ஒருவரை உதாரணமாக காட்டவேண்டுமென்றால் சற்றும் யோசிக்காமல் யுவராஜ் சிங்கை காட்டலாம். அந்தளவிற்கு போராட்டங்களை கடந்து வென்றவர் யுவி. "யுவி அவரது உச்சகட்ட பார்மில் இருந்தபோது அவருக்கு பந்து வீச எங்களின் பந்துவீச்சாளர்கள் பலர் பயந்தார்கள்" இப்படி சொன்னது இலங்கை அணி கேப்டன் சங்ககரா. அந்தளவிற்கு பந்துவீச்சளர்கள் மனதில் பயத்தை விதைத்திருந்தார் யுவி.

 

யுவிக்கு சிக்ஸர் விளாசுவது ஒரு பொழுதுபோக்குதான் ஹை-பேக்லிப்ட் வைத்துக்கொண்டு எப்படிப்பட்ட பந்தையும் அசால்ட்டாக பௌண்டரி லைனுக்கு அனுப்பி வைப்பார். அவர் பந்தை பலத்தை கொண்டு அடிக்கவேண்டியதில்லை, பேட்டை சாதாரணமாக சுழற்றினால் போதும் பந்து ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் கையில் போய் விழும். ஆங்கிலத்தில் பேட் ஸ்விங் என்பார்கள். அதாவது பந்தை நோக்கி பேட்டை வீசுவது. அதை மிக அழகாக செய்பவர் யுவி. யுவி இந்தியாவிற்கு கிடைத்த அற்புதமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவரைப்போல் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனைத்தான் இந்தியா இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது. 2011 உலகக்கோப்பை போட்டிகளையும் அதற்கடுத்த இரண்டு உலகக்கோப்பை போட்டிகளையும் எடுத்து பார்த்தால் 2011-ல் வென்றதற்கும் அடுத்ததடுத்தவற்றில் தோற்றதற்கும் இருக்கும் வித்தியாசமாய் யுவராஜ் சிங் இருப்பார்.

 

அதிரடி பேட்ஸ்மேனை தாண்டி யுவி ஒரு சிறந்த ஆப்-ஸ்பின்னர். பேட்டிங்கை தாண்டி பந்துகளை சுழற்றுவதின் மூலமே எதிரணிகளை சுக்குநூறாக்கியிருக்கிறார். மொத்தத்தில் அற்புதமான ஆல்ரவுண்டர். பந்து வீசி விக்கெட்களை அள்ளும் திறமை கொண்ட ஒரு பேட்ஸ்மேன் அதற்குப்பிறகு இன்றுவரை இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா யுவி போல் வலுவான நுட்பம் கொண்ட நான்காவது இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் இல்லை என்கிறபோது யுவி விட்டு சென்ற இடம் அணியில் இன்னும் அப்படியே இருக்கிறது. இந்தியாவின் முதல் இருபது ஓவர் சூப்பர்ஸ்டார் என்றால் யுவராஜ் தான். 2007 உலகக்கோப்பையை ஆரம்பித்தபோது அது எப்படி இருக்கும் எப்படி ஆடவேண்டும் என யோசித்து கொண்டிருந்த போது இப்படித்தான் ஆட வேண்டும் என ருத்ர தாண்டவம் ஆடி காட்டியவர் யுவி.

 

yuvi

 

ஸ்டூவர்ட் ப்ராடை புரட்டி எடுத்தது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவோடு அவர் ஆடிய வெறித்தனமான ஆட்டம் அந்த போட்டியில் பிரெட் லீயை லெக் சைடில் ஃப்ளிக் அடிப்பது எல்லாமே இந்திய ரசிகர்களுக்கு எவர்க்ரீன் நினைவுகள். பதினான்கு வயதில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றபோது அவரது தந்தை அந்த பதக்கத்தை தூக்கி எறிந்துவிட்டு யுவியை கிரிக்கெட் விளையாட சொல்லியிருக்கிறார். தன் மகனால்தான் இந்தியாவிற்கு உலகக்கோப்பைகள் வரவேண்டும் என்பதை அன்றே கணித்துதான் தூக்கி எறிந்தாரா என தெரியவில்லை. ஆனால் யுவி இந்தியாவிற்கு இரண்டு உலககோப்பைகளை வென்றுதந்தார். இருபது ஓவர் உலகக்கோப்பையில் பேட்டை சுழற்றினார் என்றால் ஒருநாள் உலகக்கோப்பையில் பந்தையும் சேர்த்து சுழற்றி அணியின் ஆணிவேராக நின்றார் யுவி.

 

யுவி மிரளவைக்கும் பில்டரும் கூட. அவரிடம் அடித்துவிட்டு ரன் ஓட எந்த பேட்ஸ்மேனும் யோசிப்பார்கள். பாய்ண்ட் திசையிலிருந்து ஸ்டம்புகளை தெறிக்கவிடுவதை பார்த்து இந்திய ரசிகர்கள் கிறங்கிபோனார்கள். "வாழ்க்கையில் போராடவேண்டும் என நினைப்பவர்களுக்கு யுவி ஒரு சிறந்த முன்னுதாரணம்" என்று சச்சின் புகழ்ந்துள்ளார். அந்தளவிற்கு ஒரு போராட்டக்கர் யுவி. கேன்சர் வந்தவர்கள் முதலில் இழப்பது நம்பிக்கையை. ஆனால் யுவியின் நம்பிக்கை அவரை கேன்சரோடு போராடி வெல்லவைத்தது. திரும்ப அவரால் கிரிக்கெட் ஆட முடியாது என மற்றவர்கள் நினைத்தபோது போராடி களத்தில் வந்து நின்றார். மோசமாக ஆடி அணியிலுருந்து நீக்கப்பட்டபோது அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு போராட்டம். மீண்டும் வந்து நின்றார். இறுதியில் வெளிநாட்டு போட்டிகளில் ஆட அவராகவே ஓய்வை அறிவித்தார். கடைசி வரை அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளவுமில்லை. அவரை யாராலும் தோற்கடிக்கவும் முடியவுமில்லை.நெவர் கிவ் அப் என்பதற்கு அர்த்தமாக ஒரு மனிதன் இருக்கவேண்டுமென்றால் அது யுவி தான்.

 


 

 

Next Story

உலகக்கோப்பை டி20 அணி இன்று அறிவிப்பு? கீப்பராக இவருக்கே அதிக வாய்ப்பு

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
World Cup T20 team announcement who has more chances as a keeper

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மேற்கீந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. அதற்கான 15 பேர் கொண்ட பட்டியலை ஒவ்வொரு அணியும் இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக நேற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதில் ஐபிஎல்- இல் கலக்கி வரும் போல்ட், மிட்செல், ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் டி20 அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்படுவார் என ஏற்கனவே செயலாளர் ஜெய் ஷா அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்திய அணி எப்போது தேர்வு செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. 

ஐபிஎல்-இல் வீரர்களின் செயல்பாடும் கருத்தில் கொள்ளப்படும் என்கிற ரீதியிலும் தகவல்கள் உலா வந்தது.அதற்கு ஏற்றாற்போல் ஹர்திக் பாண்டியா பவுலிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும் என் கேப்டன் ரோஹித் விரும்புவதாகக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஹைதிக்கும் கடந்த சில ஆட்டஙகளாக தொடர்ந்து பந்து வீசி வருகிறார்.

ரோஹித்துடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப்போகிறார் என்கிற எதிரபார்ர்ப்பும் எழுந்துள்ளது. ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும்  இணைந்து ஆடவுள்ளதாகவும் தகவ கசிந்தது. தற்போது ஜெய்ஸ்வால் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

World Cup T20 team announcement who has more chances as a keeper

மேலும் அடுத்த தலைவலியாக விக்கெட் கீப்பர் தேர்வு பார்க்கப்படுகிறது. ரெகுலர் விக்கெட் கீப்பர் பண்ட் ஐபிஎல்-இல் ஆடினாலும் அவருடைய பேட்டிங்கில் ஏற்ற இறக்கங்கள் உள்ளதால், தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் தான் முதல் தேர்வாக பார்க்கப்படுவார் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. கே.எல்.ராகுல் அடந்த இரண்டு வருடங்களாக டி20 போட்டிகளில் ஆடவில்லையென்றாலும், அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு சேர்க்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக ஆடி வருவதால் அவரும் கருத்தில் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை - பெங்களூரு ஐபிஎல் போட்டியின் போது ரோஹித் , தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பை அணி தேர்வு உள்ளது. சிறப்பாக விளையாடு என்று தினேஷ் கார்த்திக்கிடம் கூறியதும் அதற்கு வலு சேர்ப்பது போல் அமைந்துள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப், சாஹல், பிஷ்னோய் சேர்க்கப்படலாமெனவும் தகவல்கள் உலா வருகிறது. வேகப்பந்து வீச்சில் பும்ரா தவிர்த்து சிராஜ், ஆவேஷ் கான், முகேஷ் குமார், அர்ஸ்தீப் சிங் ஆகியோரது பேரும் பரிசீலனையில் உள்ளதென பேசப்படுகிறது.

இந்நிலையில், ரோஹித், பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகார்கர் ஆகியோர் இன்று (ஏப்.30) வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி 15 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.