Skip to main content

மீண்டும் ரசிகர்களுக்கு மத்தியில் ஐபிஎல் -பிசிசிஐ அறிவிப்பு!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

ipl fans

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.

 

இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தற்போது மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன.

 

இந்தநிலையில் மீண்டும் தொடங்கவுள்ள இந்த ஐபிஎல் தொடரில், ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் 16 ஆம் தேதி முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்கப்படவுள்ளன. www.iplt20.com மற்றும் PlatinumList.net ஆகிய இணைய முகவரிகளில் ரசிகர்கள் தங்களது டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.

 

கடந்த வருட ஐபிஎல் தொடரின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

விபத்தில் காலமான ரசிகர் - வீட்டிற்கு சென்று சூர்யா அஞ்சலி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
suriya paid tribute to his fan passed away

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். இம்மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாணு தயாரிப்பில் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ‘கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

திரைப்படங்களை தாண்டி தனது ரசிகர்கள் அல்லது ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் யாரேனும் மறைந்தால் அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் சூர்யா. கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில், வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இறந்துள்ளார். இவர் தீவிர சூர்யா ரசிகர் எனத் தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தைச் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தினார் சூர்யா.

அதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் சூர்யா தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கான தேவைகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரழந்தார். இவர் தீவிர சூர்யா ரசிகராகவும் சூர்யாவின் ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராகவும் இருந்துள்ளதையறிந்த சூர்யா எண்ணூரில் உள்ள அந்த ரசிகரின் இல்லத்திற்குச் சென்று அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவரான மணிகண்டன் கடந்த 7ஆம் தேதி சாலை விபத்தில் மறைந்துள்ளார். இதனால் அவரின் வீட்டிற்குச் சென்ற சூர்யா, மணிகண்டன் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Next Story

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Test series against England; Indian team announcement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.