Skip to main content

யுவராஜ் சிங் பற்றிய சுவாரசிய தகவல்களும்... அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்...

லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் மேட்ச்-வின்னர், மிகச்சிறந்த பீல்டர், டைவ்-கேட்ச்கள், பார்ட்-டைம் பவுலர், ஆல்-ரவுண்டர்,..... என இந்திய கிரிக்கெட்டிற்கு யுவராஜ் சிங்கின் அர்ப்பணிப்புகளை வார்த்தைகளால் கூற முடியாது. 

ஃபுல் ஷாட், பிளிக் ஷாட், கவர் டிரைவ் மற்றும் கட் ஷாட் இவரது பிரபலமான ஷாட்கள். மண்டியிட்டு அடிக்கும் சிக்ஸர்கள் எந்தவொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் மகிழ்ச்சியை தரும். சுழற்பந்து வீச்சில் இறங்கி வந்து அடிக்கும் ஷாட்கள் மற்றும் பலவகையான கிளாசிக் ஷாட்கள் என பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்தின் மூலம் சிறந்த பந்துவீச்சாளர்களை கூட நிலைகுலைய செய்பவர்.  

facts about yuvraj singh

 

 

யுவராஜ் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:

ஆரம்ப காலங்களில் யுவராஜ் ஒரு ரோலர் ஸ்கேட்டராக இருக்க விரும்பினார். அவர் தேசிய அண்டர்-14 ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பை வென்றார். பின் அவரது தந்தை ஆசைப்படி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். 

யுவராஜ் சண்டிகரின் மருத்துவமனையில் மதியம் 12 மணிக்கு, 12-ம் தேதி, 12-வது மாதம் பிறந்தார். அவரது அதிர்ஷ்ட எண் மற்றும் ஜெர்சி எண் 12.

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் இங்கிலாந்தின் உள்ளூர் அணியான யார்க்ஷயர்க்கு கையெழுத்திட்டார். 

யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர். 

யுவராஜ் சிங் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர்.

யுவராஜ் தனது சிறந்த நகைச்சுவை உணர்வால் எப்பொழுதும் இந்திய டிரஸ்சிங் ரூமில் குறும்புத்தனம், கலாட்டா செய்து கொண்டே இருப்பார். 

7 வயதாக இருந்தபோது, அவரது தாயாரிடம் ஒரு சைக்கிளை வாங்கித் தரும்படி வலியுறுத்தியிருந்தார். தாயார் ஒப்புக் கொண்டு சைக்கிள்  வாங்கிய பின், யுவராஜ் தனது முதல் சவாரியிலேயே காயங்களுடன் திரும்பினார்.

யுவராஜ் பஞ்சாபி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிப்பை நேசிப்பதாக பல முறை கூறியுள்ளார்.  

யுவராஜ் சிங் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

கோபத்தை சரியான திசையில் பயன்படுத்த வேண்டும். ஒரு இலக்கை அடைய அது உதவும்.  

எந்தவொரு சூழ்நிலையிலும் முயற்சியை கைவிடக் கூடாது. 

தியாகம் தான் ஒரு மனிதனை உயர்த்தும். அதுவே வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.

எந்தவித அற்புதங்களையும் நம் தன்னம்பிக்கையின் மூலம் நிகழ்த்தலாம். 

கடந்த காலத்தை அல்லது எதிர்காலத்தை பற்றி அதிகம் சிந்திக்காமல் தற்போது தன்னால் முடிந்ததை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். 

தடைகளும், வலிகளும் இல்லாமல் வெற்றி இல்லை. அவை தவிர்க்க முடியாத ஒன்று. அவற்றை எதிர்கொள்ளும் விதமே நம்மை மேலும் வலிமையடைய உதவுகிறது. 

அதிக அளவிலான வலியைச் சுமந்து வெற்றி பெறும்போது, மகிழ்ச்சி பல மடங்கு இனிப்பாக இருக்கும்.

தோல்விகளை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கடின உழைப்பிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமல் இருக்க வேண்டும். 

அசாதாரணமான ஒன்றை அடைய விரும்பும் போது பல தியாகங்கள் செய்தே ஆக வேண்டும். 

போராடும் குணத்தை எங்கும், எந்தவொரு நிலையிலும் விட்டு விடாதே.

யுவராஜ் பற்றி பிரபலங்களின் கருத்துக்கள்:

வாழ்க்கையில் சோதனைகளை எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்பதை அறிய யுவராஜ் வாழ்க்கை ஒரு உதாரணம் – சச்சின். 

யுவராஜ் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் – கெவின் பீட்டர்சன். 

எனது ஹீரோ யுவராஜ் – அர்ஜுன் டெண்டுல்கர். 

இந்திய அணி இரண்டு சிறந்த இடதுகை ஆட்டக்காரர்களை உருவாக்கியது. ஒருவர் கங்குலி, மற்றொருவர் யுவராஜ் சிங் – கபில் தேவ். 

இந்திய அணியின் சிறந்த மேட்ச் வின்னர் யுவராஜ் – கங்குலி. 

சாதனைக்காக விளையாடாமல் நாட்டிற்காக விளையாடியவர் – வாசிம் அக்ரம். 

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து வாழ்க்கை போராட்டத்தில் வென்ற நிஜ வாழ்க்கையின் சிங்கம் – ஹர்பஜன் சிங். 

எனது சகோதரர் போன்றவர். வாழ்க்கையில் கடினமான நாட்களை சந்தித்தபோதும் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார். யுவராஜ் ஒரு சாம்பியன் வீரர் – விராத் கோலி. 

இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத தூண் – பிரட் லீ.

புற்றுநோயை வென்றது, அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது. கிரிக்கெட்டில் பலர் சாதிக்கலாம். ஆனால் யுவராஜ் போல ஒரு வீரரை கிரிக்கெட்டில் பார்ப்பது கடினம் – சேவாக். 

மிகச்சிறந்த வீரர். யுவராஜ் பலருக்கு ரோல் மாடல் - வி.வி.எஸ்.லக்ஸ்மண்.

யுவராஜ் மிகப்பெரிய போராளி - முகமது கைப்.

யுவராஜ் சிங் சொன்ன கருத்துக்கள்: 

சிரிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும்போது பதட்டத்தை விட்டு விட இது உதவும்.

பயப்படாமல் நேர்மையாக இருக்க வேண்டும். வாழ்க்கை முடிவடைந்து விடும் என்று நினைக்காமல் சரியான ஆலோசனையை கேட்டு செயல்பட வேண்டும்.  

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான விளையாடும் போது எனது இன்னிங்ஸை டிரெஸ்ஸிங் ரூமில் நான் பார்க்கும் போதெல்லாம், இதை விட சிறப்பாக செய்திருக்கலாம் அல்லது சில விஷயங்கள் மாற்றி செய்திருக்க வேண்டும் என்று நினைப்பேன். எப்போதும் நம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வழிகள் உண்டு.

பாசிட்டிவ் எண்ணத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருந்தால் எந்தவித சூழ்நிலையையும் கடந்து விடலாம்.

உறவுகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அது எந்த நேரத்திலும் பிரச்சினைகளை தீர்க்க வழிவகுக்கும். 

ரிக்கி பாண்டிங் தான் யுவராஜின் பேட்டிங் ஹீரோ. முரளிதரன் தான் யுவராஜ் சந்தித்த கடினமான பவுலர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்