Advertisment

ஒரு தலைமுறையைத் தாங்கிய இருவர்... கிரிக்கெட்டில் இருந்தும் கவனிக்கப்படவில்லை?  

கிரிக்கெட் விளையாட்டு, இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தை விட, மரியாதையை விட பணத்தை விட, இப்படி பல விட விட விட சொல்லலாம், அத்தனையும் அதிகமாகக் கிடைக்கும் விளையாட்டு. அப்படிப்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய நபருக்கும், அதிக ரன்கள் குவித்த நபருக்கும் பெரிய வெளிச்சமோ பாராட்டோ இல்லாமல் இருக்கிறதென்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகணும். ஏனென்றால் அது பெண்கள் கிரிக்கெட்.

Advertisment

1982ஆம் வருடம் ஒரு வார இடைவெளியில் பிறந்த இருவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 35 வயதான மிதாலி ராஜ் மற்றும் ஜுலான் கோஸ்வாமி எனும் இரு ஜாம்பவான்கள் சாதித்து வருவது பின்வரும் தலைமுறைக்கு ஒரு மிகப் பெரும் திறவாக இருக்கும். அந்த அளவுக்கு ஆண்கள் ஆதிக்கம் நிறைந்தது கிரிக்கெட் விளையாட்டு.

Mithali shot

சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர் மித்தாலி ராஜ் ,189 போட்டிகளில் 6259 ரன்கள் 50.88 சராசரியில் குவித்து முதல் இடத்தில் உள்ளார். 17 வயதில் தன் பயணத்தைத் தொடங்கி அயர்லாந்து அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் 114 ரன்கள், 19 வயதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 214 ரன்கள் என்று அடித்து தன் வருகையை உலகிற்கு உரத்து பதிவு செய்தவர். இந்தியாவிற்காக பல வெற்றிகள், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை இறுதிவரை இரண்டு முறை என மித்தாலி ராஜின் சாதனைகள் அவரது ரன்களைப் போலவே அதிகம்.

Advertisment

சர்வதேச பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் கோஸ்வாமி.166 போட்டிகளில் 200 விக்கெட்டுகள். சமீபத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது 200வது விக்கெட்டை வீழ்த்தினார். இச்சிறப்பைப் பெறும் முதல் பெண் பந்துவீச்சாளர் இவர்தான். இவரும் தன் 19 வயதிலேயே இங்கிலாந்து தொடரில் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கப் போவதற்கான அடையாளமாக சிறப்பான ஆட்டத்தை பேட்டிங், பௌலிங் இரண்டிலும் காட்டினார். அன்று தொடங்கிய புயல் இன்னும் சுழற்றி அடிக்கிறது.

Jhulan bowling

இத்தனை சாதனைகள் இருந்தாலும், சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் சஹால், குல்தீப் ஆகியோருக்குக் கிடைத்த கவனமும் பாராட்டும் பல ஆண்டுகளாக சாதிக்கும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே எதார்த்த உண்மை. ஆனாலும், தங்களைத் தாங்களே தட்டிக் கொடுத்துக் கொண்டு சிறப்பாக ஆடி வருகிறது இந்திய பெண்கள் அணி.

மித்தாலி, ஜூலான் இருவரும் ஒரு புதிய பாதையை இந்திய பெண்கள் அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அதன் பலன் இப்போது நம் கண்முன்னே மந்தனா, கவுர், வேதா போன்ற பேட்டிங் வரவுகள் மற்றும் தீப்தி, பாண்டே, பிஸ்ட் போன்ற பௌலிங் வரவுகள் என்று தெரிகிறது. இவர்களின் இத்தனை ஆண்டு கால ஆட்டத்திற்கு கிடைத்த பெருமை இதுதான். இவர்கள் சாதித்ததை தனிப்பட்ட சாதனையாக மட்டும் பார்க்க முடியாது. ஒரு தலைமுறையின் பெண்கள் கிரிக்கெட்டை தாங்கிப் பிடித்ததற்கான பாராட்டு அவர்களைச் சேர வேண்டும். ஆனால், ட்விட்டரில் மித்தாலியின் உடையையும் அதில் தெரிந்த வேர்வையையும் கிண்டல் அடித்துக் கொண்டிருக்கின்றனர் சிலர்.

Indian womens cricket

அனைத்தையும் தாண்டி இவர்கள் இருவரின் முன் வயது இப்பொழுது கேள்விக்குறியாக இருக்கிறது. வரும் டிசம்பரில் 36 வயதைத் தொடுகிறார்கள் இருவரும். சாதனைகள் தொடரும்போது வயது தடுக்குமா என்ன? அதுவும், தோனி, ரோஜர் ஃபெடெரர், விஸ்வநாதன் ஆனந்த் என வயது பிரச்சனையாக பேசப்பட்டவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள காலமிது. விருதுகள் பல வாங்கிவிட்டார்கள், வெற்றிகள் பல குவித்துவிட்டார்கள், உலகக்கோப்பையையும் வாங்கிவிட்டால் விடைபெறும் பொழுது முழு நிறைவாக இருக்கும். வாழ்த்துவோம்...

IPL t20 jhulan mithali raj womens cricket indian cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe