Skip to main content

Ind Vs Aus: மைதானத்திற்கு மின் விநியோகம் நிறுத்தம்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Electricity supply to India vs Australia match stadium in Raipur stopped today

 

சத்தீஷ்கர் மாநிலம், ராய்பூரில் உள்ள வீர் நாராயண மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி.20 போட்டி இன்று மாலை நடைபெறவுள்ளது. 

 

ஐந்து டி.20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. அதன்படி தற்போது வரை மூன்று டி.20 போட்டிகளை விளையாடியுள்ளது. அதில் இந்தியா இரு போட்டிகளில் வென்றுள்ளது. இறுதியாக நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது. இதன் மூலம், இன்று நடைபெறவிருக்கும் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் ஐந்து போட்டிகளைக் கொண்ட டி.20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிடும். மாறாக ஆஸ்திரேலியா இன்று நடக்கும் போட்டியில் வென்றால் இரு அணிகளும் 2க்கு - 2 வெற்றி என இறுதிப் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக மாறும். 

 

இந்நிலையில், இன்று டி.20 போட்டியின் நான்காவது ஆட்டம் சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள வீர் நாராயண மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. ஆனால், அந்த மைதானத்திற்கு இன்று முதல் மின் விநியோகம் செய்யப்படமாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

இது குறித்து மின் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது; ராய்பூர் வீர் நாராயண மைதான நிர்வாகம் ரூ. 3.16 கோடி மின் கட்டணத்தை இன்னும் கட்டாமல் வைத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டே அந்த மைதானத்திற்கு மின்சாரம் தடைசெய்யப்பட்டது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டதும், இதனை பராமரிக்கும் பொறுப்பு பொதுப்பணித்துறைக்கும், மற்ற செலவுகள் விளையாட்டுத் துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை மின் கட்டணம் தொடர்பாக அணுகும்போதும், பொதுப்பணித்துறையும், விளையாட்டுத்துறையும் ஒருவரை ஒருவர் கைகாட்டுகின்றனர். இருந்தபோதும் இருவருக்கும் முறையாக தெரியப்படுத்தியும் மின் கட்டண நிலுவைத் தொகையைக் கட்டாததால், கடந்த 2009ம் ஆண்டே மின் விநியோகம் தடை செய்யப்பட்டுவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேசமயம், மின் விநியோகம் நிறுத்தப்பட்டதும் தற்காலிக மின் இணைப்பு மூலம் மின்சார வசதி பெற்று வந்தது. ஆனால் தற்போது அதுவும் தடையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முக்கிய போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், ஜெனரேட்டர் மூலம் மின் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Extension of time for electricity bill payment in 5 districts

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியிருந்தார்.

இதனையடுத்து, பேரிடர் மீட்புப்பணியை துரிதப்படுத்த ஏற்கனவே கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகிய 5 அமைச்சர்கள் நியமித்திருந்த நிலையில், கூடுதலாக மேலும் 4 அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், மூர்த்தி ஆகிய 4 அமைச்சர்களை முதலமைச்சர் நியமித்துள்ளார். மேலும், 4 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் 4 பேரும் விரைந்து சென்று மீட்புப்பணிகளை துரிதப்படுத்துவர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கனமழை எதிரொலியால் 5 மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுடைய மின்கட்டணம் செலுத்த மின்சாரத்துறை அவகாசம் கொடுத்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மக்கள் இன்று மற்றும் நாளைக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் வரும் 20ஆம் தேதி வரை தாமதக் கட்டணமின்றி மின்கட்டணம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. 

Next Story

“அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Minister Thangam Tennarasu says Pay electricity bill without penalty

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், புயல் மற்றும் மழையால் பாதிப்படைந்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் டிசம்பர் 18 ஆம் தேதி கூடுதல் அவகாசம் செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “புயலால் பாதிப்படைந்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களது மின் கட்டணத்தை அபராதமின்றி செலுத்த வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கும் பொருந்தும்” என்று கூறியுள்ளார்.