Skip to main content

ஈகோவை உடைத்த கோலி; இந்திய ஆப்கன் போட்டியில் நிகழ்ந்த சுவராஸ்யம்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

வெ.அருண்குமார்  

 

 

n

 

இந்திய ஆப்கன் அணிகளுக்கிடையேயான போட்டியில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அப்போது கோலி செய்த செயல், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் நிறையச் செய்துள்ளது.

 

உலகக் கோப்பையின் 9 ஆவது லீக் ஆட்டம் மற்றும் இந்தியாவின் இரண்டாவது லீக் ஆட்டமானது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அதன்படி ஆடத் துவங்கிய ஆப்கன் அணிக்கு டாப் ஆர்டர் கை கொடுக்கவில்லை என்றாலும், மிடில் ஆர்டரில் ஆடிய சஹிதி 80 ரன்கள், அஜ்மத்துல்லா 62 ரன்கள் என கை கொடுக்க, டெயிலெண்டர்கள் உதவியுடன் 50 ஓவர்களில் 272 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், ஹர்திக் 2 விக்கெட்டுகளும், ஷர்துல், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் ஆடிய இந்திய அணியின் துவக்க ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ரோஹித் அதிரடியாக ஆடி சதம் அடிக்க, அவருக்கு கை கொடுத்த இஷான் 47 ரன்கள் எடுக்க 156 ரன்கள் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக கிடைத்தது. இஷான் 47 ரன்களில் அவுட் ஆக, தொடர்ந்து அதிரடி காட்டிய ரோஹித் 131 ரன்கள் எடுத்து ரஷித் பந்தில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கோலி, ஷ்ரேயாஸ் உடன் இணைந்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். சிறப்பாக ஆடிய கோலி உலக கோப்பையில் தனது இரண்டாவது அரை சதம் கடந்து 55 ரன்கள் எடுக்க, ஷ்ரேயாஸ் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

இதனிடையே, இந்த ஆட்டத்தில் நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆப்கன் அணியின் டெயிலெண்டர் பேட்ஸ்மேன் நவீன் பேட் செய்த போது, இந்திய ரசிகர்கள் கோலி, கோலி என தொடர்ந்து முழக்கமிட்டவாறு இருந்தனர்.

 

தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங்கின் போதும், பவுண்டரி எல்லை அருகே நின்ற நவீனை இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்வதைத் தொடர்ந்தனர். இதைக் கவனித்த கோலி, மைதானத்தில் உள்ள ரசிகர்களைப் பார்த்து, இவ்வாறு நவீனை கிண்டல் செய்யாதீர்கள், அமைதியாக இருங்கள் என்பது போல சைகையில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதைப் பார்த்த ஆப்கன் வீரர் நவீன், கோலி அருகே வந்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இருவரும் கை குலுக்கிக் கொண்டனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. இதைக் கவனித்த வர்ணனையாளர் ரவி சாஸ்திரி, ஒரு மூத்த கிரிக்கெட் வீரரான கோலியின் இச்செயல் மிகவும் பாராட்டத்தக்கது என்று கூறினார். அதைத் தொடர்ந்து இந்த வீடியோவை ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின் போது லக்னோ மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஒரு போட்டியில் கோலி, நவீன் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்ட சம்பவம் நடைபெற்றது. பிறகு ஆப்கன் வீரர் நவீன் இன்ஸ்டாகிராமில் வைத்த மாம்பழம் ஸ்டோரி, அதற்கு கோலி ஆற்றிய எதிர்வினை என சமூக வலைத்தளங்களே களேபரம் ஆனது குறிப்பிடத்தக்கது.