Skip to main content

மின்னல் வேக ஸ்டம்பிங்! - தன் சாதனையை முறியடித்த தோனி! (வீடியோ)

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
Dhoni

 

 

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்டம்பிங் மூலம் விக்கெட்டை வீழ்த்திய தோனி, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். 
 

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. 
 

 

 

மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடிக் கொண்டிருந்தபோது 28வது ஓவரில் கீமா பவுல் எதிர்கொள்ள ரவீந்திர ஜடேஜா பந்துவீசினார். அப்போது பந்தைக் கணிக்காமல் பவுல் விட ஸ்டம்புக்குப் பின்னால் இருந்த தோனி, கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார். பவுல் சில நொடிகள் திரும்பிப் பார்த்துவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார். இருப்பினும், லெக்-அம்பயர் மூன்றாவது அம்பயரிடம் கேட்க, நம்பாத ஜடேஜா தோனியை நோக்கி இது விக்கெட்தானா? என சந்தேகத்துடன் கேட்டார். 
 

மூன்றாவது அம்பயர் ரீப்ளே செய்து பார்த்ததில் பவுல் ஸ்டம்பிங் மூலம் அவுட் ஆனது உறுதி செய்யப்பட்டது. இந்த விக்கெட்டின்போது தோனி வெறும் 0.08 விநாடிகளில் ஸ்டம்பிங் செய்திருந்தார். முன்னதாக, 2016ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அப்போதைய கேப்டன் ஜியார்க் பெய்லியை தோனி ஸ்டம்பிங் செய்ததுதான் அதிவேக ஸ்டம்பிங்காக இருந்தது. இப்போது தனது சாதனையையே தோனி முறியடித்திருக்கிறார். இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 

 

Next Story

பேட்மிட்டன் விளையாட்டு விடுதி மாணவர்கள் எங்கே போறது? -குழப்பத்தில் பெற்றோர்களும் மாணவர்களும்

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
bb

தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயிலால் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்பட்டு வந்த நிலையில் நாளை மறுநாள் 10 ந் தேதி திங்கட்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதாவது பள்ளி சுற்றுப்புறம், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு திறப்பதற்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் பேட்மிட்டன் விளையாட்டு விடுதி மாணவர்கள் தாங்கள் படித்த பழைய பள்ளிகளுக்கு செல்வதா அல்லது புதிய இடத்திற்கு செல்வதா என சரியான அறிவிப்பு வராததால் பெற்றோர்களும், மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர். விளையாட்டுத்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து சென்னை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள விளையாட்டு விடுதிகளில் தங்க வைத்து பயிற்சி அளிப்பதுடன் அருகில் உள்ள பள்ளிகளிலும் சேர்த்து படிக்க வைக்கிறது தமிழ்நாடு அரசு. இதனால் கிராமப்புற மாணவர்கள் விளையாட்டுகளிலும் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பேட்மிட்டன் விளையாட்டு பயிற்சிக்காக ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒப்பந்தப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளில் தங்கி பேட்மிட்டன் பயிற்சி பெறும் மாணவர்களை வண்டலூரில் உள்ள பெரிய மைதானத்துடன் இணைந்துள்ள விடுதியில் தங்க வைத்து பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளது. அதனால் இனிமேல் ஒரே இடத்தில் பயிற்சி அளிக்கும் முயற்சியிலும் ஆயத்தப்பணியிலும் தனியார் பயிற்சி நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேட்மிட்டன் விளையாட்டு மாணவர்கள் இதுவரை தங்கி இருந்த விடுதிகளுக்கு செல்ல வேண்டுமா? புதிய விளையாட்டு மைதானத்துடன் இணைந்துள்ள விடுதிகளுக்கு செல்ல வேண்டுமா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான அறிவிப்பு கொடுக்காததால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

மேலும், பல மாணவர்கள் பயிற்சி மைதானம் மாறப் போகிறது என்பதால் ஏற்கனவே தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்து மாற்றுச்சான்றிதழை வாங்கி வைத்துள்ளனர். மேலும் பலர் டிசி வாங்காமல் குழப்பத்தில் உள்ளனர். பழைய விடுதிக்கு போகனுமா வேண்டாமா என்ற குழப்பமும் நீடித்து வருகிறது. ஆகவே, அமைச்சர் உதயநிதியின் துறையின் கீழ் வரும் இந்த விளையாட்டு விடுதி பயிற்சி மாணவர்கள் எப்போது எந்த விடுதியில் வந்து சேர வேண்டும் என்று தெளிவான அறிக்கையை வெளியிட்டால் மட்டுமே விளையாட்டு விடுதி மாணவர்கள், பெற்றோர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்கின்றனர் துறை சார்ந்த அலுவலர்களும், பெற்றோர்களும்.

Next Story

மீண்டும் அசத்திய மாரியப்பன் தங்கவேலு

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
 Once again the uncanny Mariyappan Thangavelu

ஜப்பானில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இப்போ போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் தங்கவேலு மாரியப்பன் 1.88 மீட்டர் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் சொந்த ஊரில் செய்தியாளர்களைச் சந்தித்த மாரியப்பன் தங்கவேலுவின் தாயார் பேசுகையில், ''ரொம்ப விளையாட்டில் ஆர்வமாக இருப்பான். கால் கொஞ்சம் மாற்றுத்திறனாளிதான். பள்ளிக்கூடம் படிக்கும் போதிலிருந்தே ஆர்வமாக விளையாடுவான். முதலில் தங்கப்பதக்கம் வாங்கி விட்டான். இரண்டாவது வெள்ளி பதக்கம் வாங்கி விட்டான் என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தான். நான் விளையாடி விட்டு வருகிறேன் என வைராக்கியமாக சொல்லிவிட்டு அவனுடைய ஃபேமிலிய, குழந்தைய, எங்க ஃபேமிலிய எதையும் கண்டுக்காம விளையாடி என் பையன் ஜெயித்து விட்டான். நல்லா இருக்கிறான். எங்களுக்கு சந்தோசம். குழந்தையை கூட பார்க்காமல் ஆர்வமாக விளையாண்டுட்டு வரவேண்டும் என சொல்லி விளையாடி வென்றுள்ளான். முதலமைச்சருக்கும் வாழ்த்துக்கள், சத்தியமூர்த்தி சாருக்கு வாழ்த்துக்கள், மோடிக்கும் வாழ்த்துக்கள்'' என்றார்.