Dhoni undergoing surgery

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி முதல் நாளில் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மறுநாள் மீண்டும் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது.

Advertisment

14 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் தோனி தலைமையில் 10 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று இந்த வெற்றியுடன் 5 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் தொடரில் 250 போட்டிகள் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் தோனி பெற்றுள்ளார். அதில் 349 பவுண்டரிகளுடனும் 239 சிக்ஸர்களுடனும் மொத்தமாக 5,082 ரன்களைக் குவித்துள்ளார்.

Advertisment

தனது இடது முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட தோனி குஜராத் உடனான முதல் போட்டியில் விளையாட மாட்டார் எனச் சொல்லப்பட்டது. இது குறித்து அப்போது பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளம்மிங், “தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது அசைவுகளில் அதை நீங்கள் காணலாம். அது அவருக்கு சிறு தடையாக உள்ளது. அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளார். அவர் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் சிறந்த விளையாட்டு வீரர். அதில் சந்தேகம் இல்லை. அவர் தனது காயத்தை மேனேஜ் செய்தபடி அணியை வழி நடத்துவார்” என்றார். இதன் பின்பே சென்னை ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். சென்னை அணியின் முதல் போட்டியில் தோனி கலந்து கொண்டார். அப்போட்டியில் தோற்றாலும் தோனி விளையாடுகிறார் என்பதற்காகவே ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர்.

காலில் காயத்துடனே அனைத்து லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் போட்டிகள், இறுதிப் போட்டி என அனைத்து போட்டிகளிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். ஆனாலும் இந்த சீசன் முழுவதும் தோனி ரன்களை எடுப்பதற்கு சிரமப்பட்டதை காண முடிந்தது. தன்னை அதிகம் ஓட வைக்க வேண்டாம் என வீரர்களிடம் சொல்லி இருப்பதாக தோனி ஒரு லீக் போட்டி முடிந்த பின் கூறியிருந்தார். லீக் போட்டி ஒன்று முடிந்த பின் தோனி காலை தாங்கித் தாங்கி நடந்து சென்றதும், சென்னையில் நடந்த கடைசி லீக் போட்டி முடிந்த பின் ரசிகர்களுக்கு நன்றி செலுத்த மைதானத்தை சுற்று வந்த போதும் காலில் முழங்கால் கேப் உடனே வலம் வந்தார். இத்தகைய புகைப்படங்களும் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டது.

Advertisment

இந்நிலையில் தோனிக்கு முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இறுதிப்போட்டிக்கு பின் குஜராத்தில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் சென்ற தோனி அங்கு பிசிசிஐ மருத்துவக்குழுவில் உள்ள எலும்பியல் அறுவை சிகிச்சை நிருபரான டாக்டர் டின்ஷா பர்திவாலாவிடம் ஆலோசனை நடத்தினார். டாக்டர் டின்ஷா பர்திவாலா ரிஷப் பந்த் உட்பட முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு ஆலோசனை வழங்கியவர்.

இதன்பின்பே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த தோனி மும்பையில் உள்ள கோகிலா பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து சில காலம் ஓய்வில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “வியாழன் அன்று மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக இருக்கிறார், வியாழன் அன்று காலையில் அறுவை சிகிச்சை நடந்தது. என்னமாதிரியான சிகிச்சைகள் நடந்தது என்பது குறித்தெல்லாம் எனக்கு விவரங்கள் தெரியவில்லை” என்றார்.

இந்நிலையில் தோனிக்கு ஆர்த்ரோஸ்கோபிக் ரிப்பேர்" க்காக கீஹோல் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தோனி ராஞ்சிக்கு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுவதுமாக குணமடைய தனது வீட்டில் ஓய்வில் இருப்பார் என்றும் அடுத்த ஐபிஎல் போட்டிகளில் விளையாட அவர் உடல் ரீதியாக தயாராவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.