Skip to main content

விசித்திரமும், அபூர்வங்களும் நிறைந்த நாயகன்...

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் கிடைக்க மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த இந்திய அணிக்கு உலகின் சிறந்த விக்கெட் கீப்பர், பெஸ்ட் பினிஷர், சிறந்த கேப்டன், பல கிரிக்கெட் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியவர் என பல அவதாரங்களுடன் கூடிய தோனி என்னும் அபூர்வங்களின் நாயகன் கிடைத்தார். இவர் ஒரு கிரிக்கெட்டர் என்பதையும் தாண்டி ரசிகர்களையும், மக்களையும் கவர்ந்து விட்டார்.  

பேட்டிங், பினிஷிங்:

 

dhoni skills and playing strategy

 

 

20,30 ரன்களுக்கு 3,4 விக்கெட்களா? கடைசி 15, 20  ஓவர்களில் 200,250  ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடவேண்டுமா? இந்த இரு முற்றிலும் மாறுபட்ட நேரங்களிலும் இந்திய அணி எதிர்பார்ப்பது ஒரே ஒருவர். அவர் தான் தோனி என்னும் சகாப்தம். தன் ஒருநாள் போட்டி வரலாறு முழுவதும் அணியின் தேவைக்கேற்பவே களமிறங்கினார். தனக்கு ஏற்ற சிறந்த பொசிசன் என்ற ஒன்று இருந்தாலும், அணியின் நன்மைக்காகவும், வெற்றிக்காகவும் அதை தியாகம் செய்தார்.

2013-ஆம் ஆண்டு இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகள் கலந்து கொண்ட முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது.  இந்த தொடரின் இறுதிபோட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்திய அணிக்கு 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 46.2 ஓவரில் 182 ரன்கள் எடுத்த நிலையில் 9 விக்கெட்கள் இழந்து இந்திய அணி தடுமாறிக்கொண்டு இருந்தது. வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்படும் நிலை. கடைசி ஓவரில் 15 ரன்கள் வேண்டும். இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அதிர்ச்சியில் ஆழ்ந்தது இலங்கை அணி. இதுபோல பல உதாரணங்கள் உண்டு. 

சச்சின் அவுட்டானால் டிவியை நிறுத்திவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றது ஒரு காலம். அதை மாற்றி 9 விக்கெட்களை இழந்து கடைசி ஓவரில் இருபது ரன்கள் தேவைப்பட்டாலும் அணியை வெற்றிபெற வைக்கமுடியும் என்ற நம்பிக்கையை வீரர்களிடமும், ரசிகர்களிடமும் விதைத்தவர்.

விக்கெட் கீப்பிங்:

 

dhoni skills and playing strategy

 

சின்னசாமி மைதானத்தில் பெங்களுரு மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில் பைசில் பவுண்டரி லைனுக்கு சென்ற பந்தை விக்கெட் கீப்பரான தோனி 6.12 வினாடிகளில் 28 மீ கடந்து பவுண்டரிக்கு செல்லாமல் 2 ரன்களில் தடுத்தார். விக்கெட் கீப்பராக இருந்து கொண்டு கீப்பிங் கிட்டுடன் அவ்வளவு தூரம் ஓடுவது அரிதான ஒன்று. இதுபோன்று ஒரு வீரராகவும் சிறப்பாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக உள்ளார் தோனி.

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் டிம் செய்ஃபெர்ட் விளையாடும் போது குல்தீப் யாதவ் வீசிய பந்தில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். 0.099 வினாடியில் ஸ்டம்பிங் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் தோனி. இதற்கு முன்பு உலக சாதனையான 0.08 வினாடியில் ஸ்டம்பிங் செய்ததும் தோனிதான். ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஸ்டம்பிங் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தோனி.

தோனி இதற்க்காக தனியாக பயிற்சி எடுப்பரா? எப்படி பயிற்சி எடுக்கிறார்? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இதுவரை வலை பயிற்சியின் போது தோனி கீப்பிங் துறைக்காக தனியாக பயிற்சி செய்வதில்லை. வலைப்பயிற்சியின் போது பேட்டிங், ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என பயிற்சிகள் செய்வார். பயிற்சியின் போது கீப்பிங் செய்து பார்த்ததில்லை என்று வர்ணனையாளரும், முன்னாள் இந்திய அணி வீரருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். 

களவியூகங்களின் நாயகன்:

 

dhoni skills and playing strategy

 

கள வியூகங்களை வகுப்பதில் இவர் வல்லவர். எந்த பீல்டரை எங்கு நிறுத்த வேண்டும், எந்த பவுலரை எப்போது பவுலிங் செய்ய அழைக்க வேண்டும், எந்த பேட்ஸ்மேனை எந்த விக்கெட்டுக்கு களமிறக்க வேண்டும் என்று துல்லியமாக தெரிந்து வைத்திருப்பார். 

2010-ஆம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பொல்லார்ட் மும்பை அணிக்கு பேட் செய்து கொண்டிருந்தார். 12 பந்துகளுக்கு 33 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி கொண்டிருந்தார் பொல்லார்ட். அப்போது அம்பயர்க்கு பின்னால் மிட்-ஆப் இடத்தில் ஒரு பீல்டரை நிறுத்தினார் தோனி. இது வித்தியாசமான ஒரு பீல்டிங் செட்அப்பாக இருந்தது. பொல்லார்ட் அடித்த பந்து அந்த பீல்டரிடம் கேட்ச் ஆனது. சென்னை அணி அந்தப் போட்டியில் வென்று முதல் கோப்பையை கைப்பற்றியது. 2017 ஐ.பி.எல். இறுதிப் போட்டியிலும் புனே அணிக்கு விளையாடிய தோனி இதே மாஸ்டர் பிளான் மூலம் பொல்லார்ட்டை அவுட் ஆக்கினார். 

அந்த கேப்டன்ஷிப் இன்னும் வேறு எந்த வீரரிடமும் கண்டதில்லை. அதற்கு பிறகு சென்னை அணிக்கு எதிராக பொல்லார்ட் விளையாடிய போட்டிகளிலும் அதே மாதிரி பீல்டிங் மூலம் சில முறை விக்கெட் எடுத்துள்ளார் தோனி. பீல்டிங் வியூகங்களை எவ்வாறு அமைக்க வேண்டும்? என்பது குறித்து தோனி ஓய்வு பெற்றவுடன் ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்று சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டார்.

வீரர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பவர்:

 

dhoni skills and playing strategy

 

ஒரு வீரருக்கு தேவையான நம்பிக்கையை அளிப்பதில் மிகவும் நேர்த்தியாக செயல்பட்டு வருகிறார் தோனி. ஒரு வீரருக்கு எது சரியாக இருக்கும் என்பதை சரியாக கணித்து, அதற்கு ஏற்றார்போல அந்த வீரரை தயார் செய்து, அந்த வீரருக்கு நம்பிக்கையை அளித்து வருகிறார். 

யாரை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கேப்டன் ரோல் அதிகம். வீரர்களை கையாளுவதில் தேர்ந்தவர். பல சர்வதேச கேப்டன்களுக்கு மத்தியில் தனி ஒருவனாக காட்சியளிக்கிறார் தோனி. இன்னும் எத்தனை கேப்டன்கள் வந்தாலும் இவர் எப்பவும் மக்களின், ரசிகர்களின் கேப்டன். இவர் மிகவும் அரிதிலும் அரிதாகவே கிடைக்கும் விளையாட்டு வீரர். 

தோனி தான் என் ஹீரோ - ரிஷப் பண்ட், தோனி என் மீது நம்பிக்கை வைத்தார்; அந்த நம்பிக்கையை காப்பாற்றினேன் - ராயுடு, தோனி இல்லாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம் – ஹர்திக் பாண்டியா. இப்படி தோனியால் முன்னேறியவர்கள் ஏராளம். நான் விளையாடிய கேப்டன்களில் சிறந்தவர் தோனி என்று சச்சினே கூறியுள்ளார். 

பவுலர்களை கையாளும் விதம்:

 

dhoni skills and playing strategy

 

சென்னை அணி விளையாடிய சீசன்களில் வலுவான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் இல்லை. ஆனால் இருக்கும் பவுலர்களை கொண்டு அனைத்து சீசன்களிலும் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றது தோனியின் கேப்டன்சியை உலகுக்கு உணர்த்துகிறது. 

கங்குலி அவருடைய காலங்களில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகிர் என பல வீரர்களை உருவாக்கினார். அதேபோல தோனி பல வீரர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அந்த வரிசையில் ரோஹித், அஷ்வின், ரெய்னா, ஜடேஜா.... என்று பலர். 

கிரிக்கெட்டை தாண்டி…

சாக்ஷி ராவத் என்ற அறக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். 

எம்.எஸ்.தோனி. இவர் கிரிக்கெட்டின் சகாப்தம். உலக கிரிக்கெட்டிற்கு கிடைத்த அற்புதமான பொக்கிஷம்.

 

 

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.