Skip to main content

மேலும் ஒரு டெல்லி கேபிடல்ஸ் வீரருக்கு கரோனா உறுதி!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

anrich nortje

 

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டிகள், கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே டெல்லி வீரர் அக்ஸர் படேல், பெங்களூர் அணி வீரர் தேவதத் படிக்கல், டேனியல் சாம்ஸ் ஆகியோருக்கு கரோனா உறுதியானது.

 

கரோனா உறுதிசெய்யப்பட்ட வீரர்கள், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் தேவதத் படிக்கல் கரோனாவிலிருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளார். இந்தநிலையில், டெல்லியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக டெல்லி அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

அன்ரிச் நார்ட்ஜே இந்தியாவிற்கு வந்தபோது எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்ததாகவும், இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைப்படி ஏழுநாள் தனிமைப்படுத்தபட்ட அவருக்கு, தற்போது கரோனா உறுதியாகியுள்ளதாகவும் டெல்லி அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஐபிஎல்லில் கலந்துகொள்ளும் வீரர்கள், அணியுடன் இணைவதற்கு முன்பு ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டுமென்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கரோனா தடுப்பு விதிமுறையாகும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய வீரர்கள் ஏற்கனவே கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததால், அவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரோஹித் சொன்னதைச் செய்த பண்ட்; கலக்கிய டெல்லி அணி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024

 

gt vs dc pant delivered the rohit wish delhi capitals victory

ஐபிஎல் 2024இன் 40 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃப்ரேசரின் தொடக்க அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 ரன்களில் வெளியேறினார். புதுமையான முயற்சியாக அக்சர் 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அடுத்து பிரித்வி பவர்பிளேயிலே 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த சாய் ஹோப்பும், டெல்லி அணியின் ஹோப்பை போக்கும் வகையில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 44-3 என்று மோசமான நிலையில் இருந்த அணியை அக்சருடன் இணைந்து மீட்டார் கேப்டன் பண்ட். பரீட்சார்த்த முயற்சியைப் பயன்படுத்திக் கொண்ட அக்சர் சிறப்பாக விளையாடினார்.

பண்ட்டுக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த அக்சர் அதிரடியாக 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிக்சர்களில் கலக்கிய பண்ட் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். முத்தாய்ப்பாக மொஹித் சர்மாவின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் உட்பட 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி சேர்த்து அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக வழக்கம் போல கலக்கிய ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்தது. சந்தீப் வாரியர் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மற்ற பவுலர்கள் சொதப்பினர். குறிப்பாக மொஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்களைக் கொடுத்து ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் கொடுத்தவர் என்கிற மோசமான சாதனையைப் படைத்தார்.

gt vs dc pant delivered the rohit wish delhi capitals victory

பின்னர் 225 ரன்கள் என்கிற கடின இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கேப்டன் கில் 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் எப்போதும் போல பொறுப்பாக ஆடினார். 2ஆவது விக்கெட்டுகு சஹாவும், சாயும் சேர்ந்து 82 ரன்கள் எடுக்க சஹா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் நன்றாக ஆடி அரை சதம் கடந்த சுதர்சனும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒமர்சாய் 1, ஷாருக்கான் 8, டெவாட்டியா 4 என விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது.

பின்னர் வந்த மில்லர் தன் அதிரடியை ஆரம்பித்தார். சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைப்பார் மில்லர் என்று ரசிகர்கள் எதிரபார்த்த வேளையில், 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரஷித் 23, கிஷோர் 13 முயன்றும் குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 220 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. பண்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பண்ட்டின் இந்த அதிரடி பேட்டிங் ரோஹித்தின் கூற்றை நிரூபித்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், இங்கிலாந்தின் பேஸ்பால் ஆட்டத்தால் தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார் என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித், ரிஷப் பண்ட்டின் அதிரடியைப் பார்த்ததில்லையா என்று கூறியிருந்தார். அந்தக் கூற்றை நிரூபிக்கும் வகையில் பண்ட் நேற்றைய போட்டியில் ஆடியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போட்டியில் பண்ட் முன்னிலை வகிக்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூருவைத் தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ய்பு இருப்பதால், ஐ.பி.எல் தொடர் மேலும் சுவாரசியமடைந்துள்ளது.

Next Story

ஐ.பி.எல்- இல் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
 Rohit Sharma set a new record in IPL

ஐபிஎல்-இல் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 2024 இன் 20ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலி பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை அதிரடி துவக்கம் தந்தது. முதல் 5 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது. அதிரடியாக ஆடினாலும் இருவரும் அரை சதத்தை தவற விட்டு ரோஹித் 49 ரன்களிலும், இஷான் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து வந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா டக் அவுட் ஆனார், திலக் வர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஹர்திக், டிம் டேவிட் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹர்திக் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரொமாரியோ ஷெப்பெர்டுடன், டிம் டேவிட் இணைந்து அதிரடி காட்டினர். முக்கியமாக 10 பந்துகளை மட்டுமே சந்தித்த ரொமாரியோ 39 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் இறுதி ஓவரான நோர்க்யா ஓவரில் 4 சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகளுடன் 32 ரன்கள் குவித்தார். டிம் டேவிட் 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெடுகள் இழப்பிற்கு  234 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் இது 4ஆவது அதிகபட்ச ஸ்கோராகும்.

பின்னர் ஆடிய டெல்லி அணிக்கு வார்னர் 10, விரைவில் ஆட்டமிழந்தாலும், பிரித்வி ஷாவும், பொரேலும் இணைந்து அதிரடியாக ஆடினர்.  2ஆவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த இந்த இணையை பும்ரா பிரித்தார். பிரித்வி ஷா 66 ரன்களில் பும்ரா பந்தில் போல்டானார். பொரேல் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஸ்டப்ஸ் மட்டும் தனியாளாகப் போராடி 25 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். ஆனாலும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலிலும் 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இந்த ஆட்டத்தில் 8 ஆவது விக்கெட்டாக ரிச்சர்ட்ஸன் ரோஹித் சர்மாவின் கேட்சால் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 100 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். இது ஐபிஎல்-இல் 4ஆவது அதிகபட்ச கேட்சாகும். மும்பை அணி சார்பாக 2ஆவது அதிகபட்ச கேட்சாகும். பொல்லார்டு 103 கேட்சுகளுடன் மும்பை அணி சார்பாக அதிக கேட்சுகள் பிடித்துள்ளார். ஐபிஎல் இல்  110 கேட்சுகளுடன் கோலி முதலிடத்திலும், ரெய்னா 109 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்திலும், பொல்லார்டு மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.