Skip to main content

விஸ்வரூபம் எடுக்க தயாராகி வரும் டெல்லி கேபிடல்ஸ்...

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

பல கேப்டன்கள், ஒவ்வொரு சீசனிலும் மாற்றப்பட்ட பல வீரர்கள், புதுப்புது பயிற்சியாளர்கள் என பல விஷயங்களை மாற்றிவிட்டது டெல்லி. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை கூட ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த முறை மற்றுமொரு முயற்சியாக அணியின் பெயரையும் மாற்றியுள்ளது. மேலும் இந்திய அணியை கட்டமைத்த கங்குலியை அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது.  

 

delhi capitals

 

ஐ.பி.எல். தொடரில் தற்போது விளையாடும் அணிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணி மட்டுமே இதுவரை ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு செல்லவில்லை. 11 ஆண்டுகள் கனவை நினைவாக்கும் வகையில் புத்துணர்ச்சியுடன் இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் என்ற பெயரில் இளம் வீரர்கள் கொண்டு விஸ்வரூபம் எடுக்க தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் 11 சீசனில் 3 முறை மட்டுமே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 
 

சேவாக், கம்பீர், டி வில்லியர்ஸ், வார்னர், பீட்டர்சன் என பல ஜாம்பவான்கள் முதல் சில தொடர்களில் டெல்லி அணியில் விளையாடினார்கள். 7 கேப்டன்கள், 5 பயிற்சியாளர்கள் என டெல்லி அணி ஒவ்வொரு ஆண்டும் பல மாற்றங்கள் கொண்டு வந்த நிலையிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான புள்ளி விவரங்கள் கொண்ட அணியாக டெல்லி உள்ளது.   

 

delhi capitals

 

கடந்த ஆண்டு சிறப்பான வீரர்கள் இருந்தும் சரியான டீம் காம்பினேஷசன் அமையாமல் லீக் சுற்றில் கடைசி இடத்தை பிடித்தது. முக்கிய வீரர்களான மேக்ஸ்வெல், கம்பீர், காலின் மன்றோ, ஜேசன் ராய், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் ஃபார்ம் இல்லாமல் இருந்தது, ரபாடா காயம் காரணமாக தொடரில் வெளியேறியது போன்றவை தொடரின் முதல் பாதியில் பெரிய பலவீனமாக அமைந்தது. 
 

இந்த முறை காலின் மன்றோ, பிரித்வி ஷா, ஷிகர் தவான் என வலுவான தொடக்க ஆட்டக்காரர்கள் எதிரணிக்கு சவாலாக அமையும். ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், காலின் இங்க்ராம் ஆகியோர் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் பலமாக உள்ளனர். டாப் 5 பேட்ஸ்மேன்கள் வலுவாக உள்ளனர்.  கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல் ஆகியோர் லோயர் ஆர்டர் பேட்டிங்கில் ஹிட்டர்களாக சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். மன்ஜோத் கல்ரா, ஜலஜ் சக்சேனா, அங்குஷ் பெயின்ஸ் ஆகியோர் பேக்அப் வீரர்களாக பேட்டிங்கில் பங்களிப்பார்கள்.  
 

அமித் மிஸ்ரா, சந்தீப் லமிச்சான், ராகுல் டிவாட்டியா, அக்சர் படேல் ஆகியோர் ஸ்பின் பவுலிங்கில் அணிக்கு பலமாக இருப்பார்கள். சந்தீப் லமிச்சான் இந்த முறை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

delhi capital

 

ரபாடா, டிரென்ட் போல்ட், கிறிஸ் மோரிஸ், இஷாந்த் சர்மா, ஹர்ஷால் படேல், அவேஷ் கான் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுக்கு வலு சேர்க்கின்றனர். கிறிஸ் மோரிஸ், அக்சர் படேல், ஷேர்பான் ரூதர்போர்டு, பண்டாரு ஐயப்பா, ஜலஜ் சக்சேனா ஆகியோர் லோயர் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அணிக்கு உதவுவார்கள். 
 

உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களான ரபாடா, டிரென்ட் போல்ட், கிறிஸ் மோரிஸ் போன்ற ஃபாஸ்ட் பவுலர்கள் தொடர் முழுவதும் விளையாடுவார்களா என்பது சந்தேகம். உள்ளூர் ஃபாஸ்ட் பவுலர்களில் டி20 ஸ்பெஷலிஸ்ட் இல்லாதது பவுலிங் யூனிட்டுக்கு பெரிய பலவீனமாக அமையும். 
 

கவுதம் கம்பீர், ஜேசன் ராய், மேக்ஸ்வெல், குர்கீரத் மான், முஹம்மது ஷமி, டேன் கிறிஸ்டியன், சயான் கோஷ், லயிம் பிளங்கெட், ஜூனியர் டலா, நமன் ஓஜா ஆகிய வீரர்களை இந்த ஆண்டு விடுவித்து விட்டு ஷிகர் தவான், காலின் இங்க்ராம், அக்சர் படேல், ஹனுமா விகாரி, ஷேர்பான் ரூதர்போர்டு, கீமோ பால் ஆகியோரை எடுத்துள்ளது. 
 

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங், துணை பயிற்சியாளராக முஹம்மது கைஃப், ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராக ஜெம்ஸ் ஹோப்ஸ், ஆலோசகராக கங்குலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 24 வீரர்களில் 16 இந்திய வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். 

 

பலம்:

வலுவான டாப் ஆர்டர் பேட்டிங்.

சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூன்ட்.
 

பலவீனம்:

வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர்கள் தொடர் முழுவதும் விளையாடுவது சந்தேகம்.

கிறிஸ் மோரிஸ் தவிர பலமான ஆல்ரவுண்டர்கள் இல்லை.

சிறந்த லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை.
 

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் விவரம்:


ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், காலின் மன்றோ, ஹனுமா விகாரி, காலின் இங்க்ராம், கிறிஸ் மோரிஸ், ரபாடா, டிரென்ட் போல்ட், அக்சர் படேல், அமித் மிஸ்ரா, ராகுல் டிவாட்டியா, சந்தீப் லமிச்சான், ஹர்ஷால் படேல், அவேஷ் கான், இஷாந்த் சர்மா, மன்ஜோத் கல்ரா, ஜலஜ் சக்சேனா, பண்டாரு ஐயப்பா, ஷேர்பான் ரூதர்போர்டு, கீமோ பால், நது சிங், அங்குஷ் பெயின்ஸ். 

 

 

 

Next Story

RR vs DC: பராக், அஸ்வின் அதிரடியால் பிழைத்த ராஜஸ்தான்!

Published on 28/03/2024 | Edited on 29/03/2024
rr vs dc ipl score update parag played magnificent innings

ஐபிஎல் 2024 இன் 9ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். பின்பு பட்லருடன் சாம்சன் இணைந்தார். ஆனால் சாம்சனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 15 ரன்களில் கலீல் அஹமது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பிறகு பட்லருடன் ரியான் பராக் இணைந்தார். அந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பராக் அதிரடி காட்ட, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தடுமாறியது. அடுத்ததாக ஜுரேல் இறங்காமல், அஸ்வின் களமிறக்கப்பட்டார். அந்த முடிவு ஓரளவு சாதகமாகவே அமைந்தது. அஸ்வின் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ஜுரேலும் 20 ரன்களில் வீழ்ந்தார்.

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், மறுபுறம் பராக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். அடுத்த 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். ஹெட்மயரும் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி 1 ஓவர் முடிவில் 2 ரன்கள் எடுத்துள்ளது.

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.