ADVERTISEMENT

சென்னையிடம் அதிகமாக இருப்பது மும்பையிடம் இல்லை! அது என்ன? - CSK vs MI ஐபிஎல் அப்டேட்ஸ்

04:11 PM Apr 07, 2018 | vasanthbalakrishnan

ஐபிஎல் போட்டிகளில் இரண்டு வருடம் கழித்து மீண்டும் சிஎஸ்கே அணி தோனி தலைமையில் ஆட இருக்கிறது. சென்னை அணி சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் கூட தோனி கண்கலங்கினார். "இரண்டு வருடங்கள் கழித்து சேருகிறோம், இது ஒரு இனம்புரியாத ஓர் உணர்வு", என்றார். மேலும் சென்னை அணியும் மும்பை அணியும் நாளை முதல் போட்டியை விளையாட இருக்கின்றனர். இது மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. சென்னை, ஐபிஎல் போட்டியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மும்பை அணியுடன் பைனல் மேட்ச்சில் தோற்று விடைபெற்றது. அதற்கு பின்னர் நாளை நடக்கும் போட்டியில்தான் சென்னை அணி களம் இறங்க இருக்கிறது, அதுவும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸுடன்.

ADVERTISEMENT



சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் போட்டி என்றாலே அதனை சூப்பர் இந்தியன் டெர்பி அல்லது எல் கிளாசிக்கோ ஆப் ஐபிஎல் என்பார்கள். அதாவது எளிய முறையில் சொல்லவேண்டுமானால் இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் போன்றது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் இருபத்தி நான்கு போட்டிகள் விளையாடியிருக்கின்றனர். அதில் மும்பை இந்தியன்ஸ் அணி பதிமூன்று வெற்றி அடைந்திருக்கிறது. சென்னை அணியும் முமபையும் அணியும் மூன்று முறை ஐபிஎல் பைனலில் சந்தித்துள்ளனர் அதில் மும்பை இரண்டு முறை வென்றிருக்கிறது. சென்னை ஒரு முறை. ஆனால், சென்னை நான்கு முறை 'ரன்னர் அப்' இடத்தை பெற்றிருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்குள் அதிக ரன்கள் பெற்ற வீரராக சுரேஷ் ரெய்னா இருக்கிறார். அதிக விக்கெட்டுகள் பெற்றவர்களில் லசித் மலிங்கா இருக்கிறார். மலிங்கா இந்த முறை ஏலத்தில் எடுக்கப்படவே இல்லை என்பது மும்பை அணிக்கு ஒரு குறைபாடே. இது போன்று பல விஷயங்கள் இந்த இரு அணிகளுக்குள் இருக்கிறது. அதனால், இந்த இரண்டு அணியின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிவோம் வாருங்கள்.

சென்னை அணி ஒரு பார்வை :

ADVERTISEMENT



பலம்

அணியின் அனுபவ வீரர்கள்

சென்னை அணியின் முதல் பலமாக இருப்பது அணியின் மையமாக இருக்கும் ஐந்து வீரர்கள் தான். தோனி, ரெய்னா, ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ் மற்றும் பிராவோ ஆகியவர்களை ஏலத்தில் வாங்கிய பின்னர் சிறு சிறு மாற்றங்களை மட்டும்தான் அணியில் மேற்கொள்வர். அதேபோன்று மும்பை, கொல்கத்தா போன்ற அணிகளும் அணியின் மையமாக ஒரு நான்கு வீரர்களை வைத்திருப்பார்கள். மாற்றங்கள் அடிக்கடி எதுவும் செய்யாமல், நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்களை வைத்துக்கொண்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து களத்தில் இறங்குவதுதான் சென்னை அணியின் முதல் வெற்றி பார்முலா.

பேட்டிங்

சென்னை அணிக்கு அளவுக்கு அதிகமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இதனால், அடுத்தடுத்த ஆட்டங்களில் வீரர்கள் தங்கள் திறமையை சூடுபறக்க காட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது. சிஎஸ்கே அணியில் மொத்தம் ஆயிரம் ரன்களுக்கு மேல் ஐபிஎல் போட்டிகளில் எடுத்தவர்களாக எட்டு பேர் இருக்கின்றனர். அவர்களை வரிசை படுத்திபார்த்தால் ரெய்னா(4540), தோனி(3560), வாட்சன்(2622), விஜய்(2511), ராயுடு(2416) ரன்களை எடுத்துள்ளனர். இவர்களை போன்று அடுத்து ஆடுவதற்கு தகுதியான வீரர்களாக கேதார் ஜாதவ் மற்றும் சாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்களும் லிஸ்டில் இருக்கின்றனர். இவர்களின் அதிரடியும் இந்த வருட ஐபிஎல்லில் இருக்கும் என்று சொல்கின்றனர்.

சுழற்பந்து வீச்சாளர்கள்

ஐபிஎல் போட்டிகள் ஒருசில வருடங்களாக சுழற்பந்து வீரர்களின் கோட்டையாகவே இருக்கிறது. ஒருவேளை இந்திய பிட்ச்சுகள் சுழற்பந்துக்கானதாக இருப்பதாலோ என்னவோ சிஎஸ்கேவில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம். அஸ்வின் இருந்த இடத்தை யார் நிரப்புவது என்று இருக்கையில் மூன்றாவது தரவரிசையில் இருக்கும் ஹர்பஜனை ஏலத்தில் வாங்கினர். அவரும் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர்தான். இவர்களை அடுத்து நல்ல லெக் சுழற்பந்து வீச்சளர்களும் (leg break spin) இடம் பிடித்துள்ளனர். கரன் ஷர்மா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர்கள் தான். ஜடேஜா என்ற சுழற்பந்து மற்றும் பேட்டிங் நாயகன் இருப்பது எதிரணிக்கு மோசமான ஒரு நெருக்கடியை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பலவீனம்

ஐபிஎல் ஆடாத வீரர்கள்

சென்னையின் ஒரு யுக்தியாக இந்த அனுபவமற்ற வீரர்களை பயன்படுத்துவது இருந்தாலும், இந்த முறை இதனை எல்லோரும் பலவீனமாகவே கருதுகின்றனர். இருபத்தி நான்கு பேர் கொண்ட அணியாக சென்னை இருந்தாலும் அதில் ஒன்பது வீரர்கள் ஒருமுறை கூட ஐபிஎல் ஆடியது இல்லை. அதேபோன்று பதினோரு வீரர்கள் முப்பது வயதுக்கும் மேல் இருக்கின்றனர். இப்படி இருப்பதனால் அணிக்குள் ஒரு புரிதல் ஏற்பட கால தாமதம் எடுக்கும். அதை கேப்டனாக இருக்கும் தோனிதான் சரி செய்ய வேண்டும் இல்லையெனில் ஒருமிதமாக அணியால் ஒன்று சேர்ந்து ஆடுவது கடினமாக இருக்கும் என்கின்றனர்.

குறைவான வேகபந்து வீச்சாளர்கள்

என்னதான் அணி சுழற்பந்தில் பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது என்றாலும் இரண்டே இரண்டு இன்டர்நேஷனல் தரம் வாய்ந்த வீரர்களான லுங்கி ங்கிடி மற்றும் மார்க் வுட் ஆகியோரைத்தான் வேகப்பந்துக்கு வைத்திருக்கிறது. அவர்களும் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது இல்லை இதுவே முதல் முறை. சர்துல் தாகூர் மற்றும் பிராவோ தான் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை விளையாடி இருக்கிறார்கள். இவர்களே எவ்வாறு சமாளிக்க முடியும் . கொஞ்சம் கடினமானது தான்.

மும்பை அணியின் அலசல்



பலம்

அணியின் அனுபவ வீரர்கள்

சென்னை அணியில் எப்படி ஒரு நான்கு அனுபவ வீரர்களை வைத்திருக்கிறார்களோ, அதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி பல வருடங்களாக ரோஹித் ஷர்மா, பும்ரா, பாண்டியா சகோதரர்கள், பொல்லார்ட், திவாரி போன்ற வீரர்களையே நிலையாக வைத்திருக்கின்றனர். இதில் ஒரு காலத்தில் சச்சினும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்களை வைத்துதான் பத்து வருட ஐபிஎல்லில் மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றிருக்கின்றனர். அதனால் இது ஒரு வழக்கமான ஒரு அணியாகவும் இது அவர்களின் பலமாகவும் இருந்து வருகிறது.

பேட்டிங்

இதுவும் சென்னை அணியை போலவே இவர்களுக்கு ஒரு பலமாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவில் ஆரம்பித்து 6 வது டவுன் இறங்கும் பொல்லார்ட் வரை அதிரடி ஆட்டக்காரர்கள் தான். சில சமயங்களில் இது நிலை குழைந்தாள் மட்டுமே அணிக்கு ஒரு பிரச்சனை ஏற்படும் நிலை மும்மை அணிக்கு உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள்

மும்பை அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ரா மும்பை அணிக்கு பெரிய பலம். அவர் விக்கெட் எடுக்கிறாரோ இல்லையோ அவர் போடும் ஆறு பந்துகளிலும் ரன்கள் கொடுக்க மாட்டார். பவுன்சர் பந்துகள் போடும் ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருவரான குமின்ஸ் இருக்கிறார். இந்திய மைதானம் பவுன்சர் பிட்ச் இல்லை என்றாலும், வேகம் தேவையான ஒன்றே. வங்கத்தின் ஒரு உருப்படியான வீரர் என்றால் அது முஸ்தபிசுர் ரஹ்மான் தான். இடது கை வீச்சாளர் வேகம் குறைவாக இருந்தாலும் பேட்ஸ்மேன்களை மிரட்டிவிடுவார். இது போன்ற ஒரு பந்து வீச்சாளர் சென்னைக்கு இல்லாதது, ஒரு பெரிய பலவீனமே.

பலவீனம்

சுத்தமாக சுழற்பந்து வீச்சாளர்களே இல்லை?

இந்திய மைதான பிட்ச்களுக்கு தேவை சுழற்பந்து வீச்சாளர்கள்தான். ஆனால், மும்பை அணிக்கு என்று இருந்த ஹர்பஜனை ஏலத்தில் எடுக்காமல் சென்னைக்கு தாரைவார்த்துவிட்டனர். தற்போது அந்த அணிக்கு என்று சர்வதேச சுழற்பந்து பவுலர்கள் இல்லை. பார்ட்டைம் சுழற்பந்து வீச்சாளர்களான ரோஹித், டுமினி மற்றும் குர்னால் பாண்டியா தான் இருக்கின்றனர். இங்கு இது தேவையாக இருக்க, சென்னையிடமோ அதிகமாக இருக்கிறது.

விக்கெட் கீப்பர்

மும்பை அணிக்கு என்று இதுவரை சிறப்பான ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இல்லை. அனுபவம் குறைவாக இருக்கும் வீரர்களான இஷான் கிஷான் மற்றும் ஆதித்யா டாரே இடம் பெற்றிருக்கின்றனர். இவர்கள் இருவரும் இந்திய சர்வேதச அணிகளில் ஆடியது இல்லை, உள்ளூர் கிரிக்கெட்டில் நன்கு விளையாடினாலும். ஐபிஎல் போட்டிகளில் அவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

எந்த அணி சிறந்தது என்பதை இன்னும் சற்று நேரத்தில் களத்தில் பார்ப்போம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT