Skip to main content

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 'சென்னை - மும்பை' அணிகளின் கடந்த கால வரலாறு ஒரு பார்வை!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

csk vs mi

 

ஆண்டு தோறும் மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ இந்தியாவில் ஐ.பி.எல் திருவிழா தொடங்கிவிடும். இதுகுறித்தான எதிர்பார்ப்பு அவ்வருடத்தின் தொடக்கத்திலேயே, அனைவரிடமும் கரோனா வைரஸ் தொற்றை விட வேகமாகத் தொற்றிக் கொள்ளும். அணி நிர்வாகங்களும் தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தங்களது அணி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்குப் பெரும் தீனியிடத் தவறுவதில்லை.

 

இந்தாண்டும் வழக்கம் போல இவை அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு, கரோனா காரணமாக ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்டது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதனையடுத்து கரோனா தொற்று குறைவாக உள்ள அமீரகத்தில் இப்போட்டியை நடத்தத் திட்டமிட்டு, பின் அதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பி.சி.சி.ஐ வெளியிட்டது. அதன்படி சென்னை மற்றும் மும்பை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், இவ்விரு அணிகளின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகமானார்கள்.

 

காரணம், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்பது இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி போன்றது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எவ்வாறு எதிர்நோக்குகிறார்களோ, அதைப்போலவே சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியை இந்திய ரசிகர்கள் எதிர்நோக்குவார்கள்.

 

ஐ.பி.எல் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கெடுக்கின்றன. இதில், மற்ற அணிகளுக்கும், அணி ரசிகர்களுக்கும் இடையே இல்லாத போட்டி சென்னை- மும்பை அணிகளுக்கு இடையே மட்டும் ஏன்?? இவ்விரு அணிகளும் எதிரெதிர் துருவமாக உருவெடுத்தது எப்படி??? இரு அணிகளுக்கும் இடையேயான கடந்த கால வரலாறு என்ன?? சற்று பின்னோக்கிப் பார்ப்போம்...

 

ஆரம்பக் காலகட்டங்களில் சென்னை அணியை தோனி வழிநடத்த, மும்பை அணியை சச்சின் வழிநடத்தினார். இந்திய கிரிக்கெட்டின் இரண்டு ஜாம்பவான்களும் இந்திய அணிக்காக விளையாடியபோது, ஒன்றாக அமர்ந்து கைத்தட்டி ரசித்த ரசிகர்கள், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போது தங்கள் அபிமான வீரரை விட்டுக்கொடுக்க முடியாத நிலைக்கு ஆளானார்கள். அதன்பின், இரு அணிகளையும் ஒப்பிடும் பழக்கம் வாடிக்கையானது. அதில், தொடங்கிய மோதல், மும்பை அணிக்கு பல கேப்டன்கள் மாறியபின்னும் இன்று வரை நீடிக்கிறது.

 

Ad


இதுவரை சென்னை மற்றும் மும்பை அணிகள் மொத்தம் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 11 முறையும், மும்பை அணி 17 முறையும் வென்றுள்ளது. இது, சென்னை அணிக்கு எதிராக ஒரு அணி கொண்டுள்ள அதிகபட்ச வெற்றி விகிதம் ஆகும். தனிநபர் அதிகபட்சமாக இரு அணிகளிலும் உள்ள நடப்பு வீரர்களின் சாதனையை ஒப்பிடும் போது, சென்னை வீரர் வாட்சன் மும்பை அணிக்கு எதிராக 80 ரன்கள் குவித்துள்ளார். மும்பை அணியின் நடப்புக் கேப்டனான ரோகித் ஷர்மா 2011 -ஆம் ஆண்டு 87 ரன்கள் குவித்துள்ளார். இரு அணிகளின் ஒட்டு மொத்த வரலாற்றை ஒப்பிடும் போது, சென்னை அணி வீரர் மைக் ஹஸி 2013 -ஆம் ஆண்டு, 86 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாகும். அதே வேளையில் மும்பை அணி வீரர் ஜெயசூர்யா 117 ரன்கள் குவித்துள்ளது சென்னை அணிக்கு எதிரான மும்பை அணியின், தனிநபர் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

 

சென்னை அணிக்கு எதிரான அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மும்பை அணி வீரராக லசித் மலிங்கா 31 விக்கெட்டுகளுடன் முன்னணியில் உள்ளார். 12 விக்கெட்டுகள் வீழ்த்தி பொல்லார்ட் இரண்டாம் இடத்தில் உள்ளார். மும்பை அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிக விக்கெட் வீழ்த்தியவராக, பிராவோ 25 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

 

மும்பை அணிக்கு எதிரான, சென்னை அணி வீரரின் தனிநபர் சிறந்த பந்துவீச்சாக, மோகித் ஷர்மா பந்து வீச்சு உள்ளது. அவர், மும்பை அணிக்கு எதிராக 2014 -ஆம் ஆண்டு நான்கு ஓவர்கள் பந்து வீசி, 14 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியதே இன்று வரை சிறந்த சாதனையாக உள்ளது. மும்பை அணி தரப்பில் சென்னை அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங் 2011 -ஆம் ஆண்டு நான்கு ஓவர் பந்து வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகப் பதிவாகியுள்ளது.

 

Nakkheeran

 

இரு அணிகளும் இறுதிப்போட்டியில் 3 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளனர். அதில் மும்பை அணி இரண்டு முறையும், சென்னை அணி ஒரு முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

 

Next Story

ஐபிஎல் 2023; இன்ஸ்டாவை நம்பி ஏமாந்த இளைஞர்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

chennai mumbai match ipl cricket chepauk stadium related issue 

 

சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோயில் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 32). ராயப்பேட்டையில் பட்டயக்கணக்கர் படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் ஐபிஎல் போட்டியை பார்க்க விரும்பி உள்ளனர். இதனால் கடந்த 6 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கான போட்டிக்கான டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பெற முயன்றுள்ளார். அப்போது ஆன்லைனில் டிக்கெட் கிடைக்காததால் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் வழங்கும் கவுண்டர் மூலம் பெற நேரடியாகச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் கூட்டம் அலைமோதியதால் அவரால் அங்கும் டிக்கெட் பெற முடியவில்லை.

 

அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஐபிஎல் பெயரில் இருந்த வலைதள பக்கத்தில்  ஐபிஎல் டிக்கெட் விற்பனைக்கு இருப்பதை பார்த்த அருண் அந்த பக்கத்தை தொடர்பு கொண்ட போது வினோத் யாதவ் என்பவர் அருணிடம் தன்னிடம் ஐபிஎல் டிக்கெட் இருக்கிறது என்று கூறியுள்ளார். டிக்கெட்டுக்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் இணைய வழியிலான டிக்கெட் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய அருண் குமார் 20 டிக்கெட்களுக்கான கட்டணமாக 90 ஆயிரம் ரூபாயை இணையதளம் மூலம் செலுத்தி உள்ளார். ஆனால், அவர் கூறியபடி ஐபிஎல் டிக்கெட் கொடுக்காமல் வினோத் யாதவ் ஏமாற்றி உள்ளார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அருண் குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு வினோத் யாதவ் பணத்தை தர முடியாது என்று  கூறியுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் அருண் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

Next Story

சென்னை Vs மும்பை - சேப்பாக்கத்தில் களமிறங்கிய திரை பிரபலங்கள்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

celebrity dhanush, nayanthara watched csk vs mi match in chennai

 

16வது ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றது. இந்த ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள் மோதுகின்றன. தற்போது வரை நடந்துள்ள ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லக்னோ அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அதே 11 புள்ளிகளுடன் சென்னை அணி மூன்றாவது இடத்திலும், உள்ளன.

 

இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றனர். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 139 ரன்கள் எடுத்துள்ளனர். இதையடுத்து 140 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது. 

 

இந்த நிலையில் இப்போட்டியை பார்க்க திரை பிரபலங்கள் பலரும் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வருகை தந்துள்ளனர். அந்த வகையில் தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், வரலக்ஷ்மி சரத்குமார், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் நேரில் கண்டு ரசிக்கின்றனர். மேலும் தோனியின் மனைவி சாக்‌ஷி, அவரது குழந்தை ஸிவா ஆகியோரும் குடும்பத்துடன் வந்துள்ளனர்.