ADVERTISEMENT

“வேறு கேப்டன் கீழே விளையாட நேரிடும்...” - சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை!

11:45 AM Apr 04, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

16 ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6 ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே, லக்னோ அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கான்வே 47 ரன்களுக்கும் அடுத்து வந்த துபே 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதி ஓவரில் ராயுடு அதிரடி காட்டி வேகமாக ரன்களை சேர்த்தார். இறுதி ஓவரின் இரண்டாம் பந்தில் களமிறங்கிய தோனி தான் சந்தித்த முதல் இரு பந்துகளை சிக்ஸர்களாக பறக்கவிட்டார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களைக் கடந்த வீரரானார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 217 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்தது. இமாலய இலக்குடன் ஆடிய லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான மேயர் மற்றும் ராகுல் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். அதிரடியாக விளையாடிய மேயர்ஸ் 22 பந்துகளில் 53 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். பின்பு வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இறுதியில் பூரன் 18 பந்துகளுக்கு 32 ரன்களை எடுத்து வெளியேறினார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. சென்னை அணியில் மொயின் அலி 4 விக்கெட்களையும் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

நேற்றைய போட்டியின் போது லக்னோ அணிக்கு எதிராக சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் மொத்தமாக 13 ஒய்டுகளையும், 3 நோ பால்களையும் வீசியுள்ளனர். இது ரசிகர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சிஎஸ்கே பௌலர்ஸ் பந்து வீசுவதற்கும் கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு டோனி இது குறித்து பேசுகையில், "சென்னை அணியினர் வேகப்பந்து வீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. பிட்சிற்கும், சூழலுக்கும் ஏற்றாற்போல் பந்துவீச வேண்டும். பந்துவீச்சாளர்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். எதிரணியின் வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் என்ன யுத்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதனை நீங்களும் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் நாம் கூடுதலாக நோபால் மற்றும் ஒய்டுகளை வீசினோம். இது நிச்சயம் சரியான விஷயம் கிடையாது. நோ பால்களை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், சிஎஸ்கே அணி வீரர்கள் புதிய கேப்டன் கீழே விளையாட நேரிடும்" எனக் கூறினார்.

சென்னை அணியினர் குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக தோனிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. தற்போது லக்னோ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் பந்து வீசுவதற்கு கூடுதலான நேரத்தை சென்னை அணி வீரர்கள் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT