cricketer robin singhs car seized by chennai police

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங், ஊரடங்கு விதிகளை மீறியதாகச் சென்னை போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாகச் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காய்கறி வாங்குவதற்காகத் தனது வாகனத்தில் சென்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் விதிமுறைகளை மீறியதாகச் சென்னை போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தனது வாகனத்தில் சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து திருவான்மியூர் பகுதிக்குக் காய்கறி வாங்கச் சென்றுள்ளார். அப்போது சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீஸார் அவரது வாகனத்தை வழிமறித்துள்ளனர். அவர் எங்குச் செல்கிறார் என போலீஸார் விசாரிக்கையில், காய்கறி வாங்கச் செல்வதாகக் கூறியுள்ளார். மாஸ்க் அணிந்திருந்ததால், அவரை அடையாளம் கண்டறியாத போலீஸார், விதிமுறைகளின்படி அத்தியாவசியப் பொருட்களை வாங்க நடந்துதான் செல்ல வேண்டும் வாகனத்தில் செல்லக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது காரை போலீஸார் பறிமுதல் செய்ததால், வேறொருவரை வரவழைத்து அவரது வாகனத்தில் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார் ராபின் சிங்.

Advertisment

இதுகுறித்து ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "சனிக்கிழமை காலை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈ.சி.ஆர்) இருந்து ராபின் சிங் வாகனம் வருவதைக் கண்டோம். சோதனை செய்தபோது, அவர் தனது வாகனத்தில் பயணிக்க இ-பாஸ் வைத்திருக்கவில்லை, பயணத்திற்கான எந்தவொரு சரியான காரணமும் இல்லை. அவர் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார். நாங்களும் விதிமுறைகளின்படி, ஊரடங்கு விதிகளை மீறியதற்காக அவரது வாகனத்தைப் பறிமுதல் செய்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.