Skip to main content

வெளுத்து வாங்கும் சகோதரர்கள் vs வெளியேற்றப்படும் சகோதரர்கள் - இந்திய கிரிக்கெட்!  

2006ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தபோது, 'இந்தியாவுக்கு  அடுத்த  கபில்தேவ்  கிடைச்சுட்டாரு'னு எல்லோரும்  பேசினார்கள். பௌலிங்  மட்டும்  இல்லை பேட்டிங்கும் நல்லா பண்ணுவேனென்று  சில போட்டிகளில் ரன் அடிச்சும் காண்பித்தார் இர்பான் பதான். அவரது பேட்டிங் பார்த்து சில போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் இறக்கி விட்டார்கள். அடைமழை போல இனி அடுத்த சில வருடங்கள் நிரந்தரமாக சாதிப்பாரென்று  பார்த்தால்,  பொசு பொசுவென தூறல் போல நின்று விட்டார். இவர் தான் இப்படியென்று பார்த்தால் இவரது அண்ணண் யூசுப் பதானும் ஆயிரம் வாலா பட்டாசு மாதிரி ஆரம்பத்தில்  சிக்ஸராக  பறக்க விட்டு பின்னர் ஓய்ந்துவிட்டார்.
 

pathan brothers


இர்பான் பதான் 2007ஆம் வருடம் நடந்த T20 தொடரின் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு, இந்தியா கோப்பையை வெல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார், ஆட்டநாயகன் விருதும் வென்றார். 2008 ஆம் வருடம் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில்  சிறந்த பேட்டிங் மற்றும் பௌலிங் செய்து ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இவரது சிறப்பான ஆட்டம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில்  டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்ல உதவியது.

2007 -T20  உலககோப்பை , 2011- 50 ஓவர்  உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை என்று வென்ற அணிகளில் இடம்பிடித்து பெயரெடுத்த பதான் சகோதரர்கள் தற்போது விளையாட இடம் கிடைக்காமல் காணாமல் போய்விட்டனர். இந்திய அணியில்விளையாடுவதைத் தாண்டி பரோடா அணியிலும் கூட  நீடிக்கமுடியாமல் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, பின்பு அணியில் இருந்து வெளியேறி, 2017ஆம் ஆண்டு ரஞ்சி  சீசனை இர்பான் பதான் விளையாடவே இல்லை. அடுத்த வர உள்ள 2018 சீசனில் ஜம்மு அணிக்காக விளையாட உள்ளார். ஜம்மு அணிக்கு  இப்போது பயிற்சியாளர் பொறுப்பும் இர்பான் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. யூசுப் பதானும் உடல்நலக்குறைவால் விளையாடவில்லை. மேலும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டதற்காக விளையாட்டிலுருந்தும்  ஐந்து மாதம் தடை செய்யப்பட்டார். சுவாசக் கோளாறு சிகிச்சையின் போது கொடுத்த மருந்தில் தெரியாமல் உட்கொண்டதாக ஒத்துக்கொண்டார். இதன் எதிரொலி ஐபிஎல் ஏலத்தில் எதிரொலித்தது, ஒரு காலத்தில் நட்சத்திர வீரராக இருந்த இர்பான் பதான் விலைபோகவில்லை. யூசுப் பதான் சற்று ஆறுதலாக சன் ரைசர்ஸ் அணியால் 1.90 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டார்.

 

pandya brothers


பதான் சகோதரர்கள் இப்படி சரிவில் இருக்க மறுபக்கம் பாண்டியா சகோதரர்கள் கலக்கி வருகின்றனர். ஹர்டிக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா இருவரும் ஐபிஎல் ஏலத்தில் கூட்டாக 20 கோடிக்கு ரூபாய்க்கு விலை போயுள்ளனர். இது வரையில் பெரிய சாதனைகள் செய்யாவிட்டாலும்  ஹர்டிக் பாண்டியாவின் சிக்ஸர் அடிக்கும் திறமையும் பௌலிங் செய்வார் என்ற நம்பிக்கையும் அவரை இந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. அதனாலேயே அவரை அடுத்த கபில் தேவ் என்று  ஒரு கூட்டம் கூற ஆரம்பித்துவிட்டது. 2017ஆம் ஆண்டு  ஐபிஎல் தொடரில் சிறப்பான பேட்டிங் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.  250 ரன்கள் தான் என்றாலும் அதை வெவ்வேறு சூழ்நிலையில் 160 பந்துகளில் அடித்தார் என்பது தான் சிறப்பு. கூடவே 4 ஓவர்களை வீசக்கூடிய வீரர். குர்னால் பாண்டியாவும் சரிசமமான ஆட்டத்தைத் தான் ஆடியிருந்தார் என்றாலும் பந்துவீச்சில் அவர் ஒரு சுழல் பந்து வீச்சாளர். இந்திய அணிக்கு தேவைப்படுபவர் வேகப்பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர் என்பதால் அதிர்ஷ்டம் தம்பிக்கு அடித்தது. சர்வதேச போட்டிகளில் அவ்வளவாக விளையாடவில்லை என்றாலும், ஐபிஎல் நல்ல தளமாக அமைந்து விட்டது. இந்திய அணி மிகவும் எதிர்பார்க்கும் ஆல்ரவுண்டரை ஹர்டிக் பாண்டியாவிடம் தேடுகிறது. பதில் இனி வரும் போட்டிகளில் தெரியும்.

 

pandya brothers celebrating


'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?' மாதிரி, 'உங்களில் யார் அடுத்த கபில்தேவ்?' என்ற மீடியா மற்றும் ரசிகர்களின் தேடலில் சிக்கி எத்தனை பேர் காணாமல் போகப்போறாங்களோ? பாண்டியா சகோதரர்கள் எப்படி இந்த புதிய அழுத்தத்தைத் தாங்கி தங்கள் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவந்து இந்திய அணிக்கும் தங்கள் ஐபிஎல் அணிக்கும் வெற்றிகளை தேடித்தருவார்கள்  என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். பாண்டியா சகோதரர்களுக்கு சாதிப்பதற்கு வயதும் திறமையும் இருக்கிறது. வாழ்க்கை வட்டத்தில் இப்போது உள்ள உச்சத்தை தலைக்கேற்றாமல் சரியாக பயன்படுத்திக் கொண்டால்  இன்னும்  சிறப்பாக மிளிரலாம். பல உயரங்களைத் தொடலாம். பதான் சகோதரர்கள் 33 வயதை கடந்திருந்தாலும், மீண்டும் தங்களை சிறப்பாய் உலகிற்கு காட்டிக்கொள்ள, இன்னும் அவகாசம் உள்ளது. இப்போதுள்ள தடைகளைத் தாண்டி மீண்டு இன்னும் உள்ள சில வருடங்களை சிறப்பாய் விளையாடி விடைபெற வாழ்த்துவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்