
ருமேனியாவில் கடந்த 7ஆம் தேதி (07.05.2025) முதல் நேற்று (16.05.2025) வரை சூப்பர்பெட் கிளாசிக் - 2025 என்ற சர்வதேச செஸ் தொடர் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதனையடுத்து பிரக்யானந்தாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சாம்பியன் பட்டம் பெற்ற பிரக்யானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “ருமேனியாவில் நடந்த சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025ஐ வென்ற சென்னையின் பெருமை மிக்க கிராண்ட்மாஸ்டர் பிரக்யானந்தாவுக்கு வாழ்த்துக்கள். அவரது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டம் இதுவாகும். கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அவரது திறமை அசாதாரண அமைதியையும், தந்திரமான ஆழத்தையும் வெளிப்படுத்தியது.
இந்தியச் சதுரங்கத்தின் இந்த முக்கியமான தருணத்தைத் தமிழ்நாடு கொண்டாடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். சாம்பியன் பட்டம் பெற்றுள்ள பிரக்ஞானந்தா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர் திட்டம் (Elite Sports person Scheme) திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.