டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23 ஆம் தேதி கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கிய நிலையில், சனிக்கிழமையன்று (24.07.2021) மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சீனாவைச் சேர்ந்த ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார்.
இப்போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற பெரும் சாதனையை நிகழ்த்தினார். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அமைப்பு, ஜிஹுய் ஹூவிற்கு ஊக்கமருந்து பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளது.
ஒருவேளை ஜிஹுய் ஹூ ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானால், அவரிடமிருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு, இரண்டாம் இடம் பெற்ற மீராபாய் சானுவிற்கு அப்பதக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.