Skip to main content

செஸ் உலகக்கோப்பை ; கார்ல்சன் வெற்றி

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

Chess World Cup; Carlson wins

 

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) என்ற செஸ் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் தொடங்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த 10 ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வந்தது.

 

இதில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட் மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா, ஆகஸ்ட் 21 அன்று அரையிறுதி டை - பிரேக்கர் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 3 ஆவது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஜிஎம் ஃபேபியானோ கருவானாவை (2,782) தோற்கடித்து. FIDE 2023 செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

 

இந்த அரையிறுதி வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா முன்னேறிய நிலையில் நேற்று முன்தினம் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதிய உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று 35 நகர்த்தலுக்கு பிறகு டிராவில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று போட்டி நேற்று துவங்கிய நிலையில் இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்தது. இந்நிலையில் இன்று தற்பொழுது செஸ் டை பிரேக்கர் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. டை பிரேக்கர் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய பிரக்ஞானந்தா முதல் சுற்றில் வீழ்ந்த நிலையில், இரண்டாம் சு ற்று டிராவில் முடிந்தது. இதனால் நார்வே நாட்டின் கார்ல்சன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

 

 

 

 

Next Story

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி; பட்டம் வென்ற தமிழக வீரர்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Tamil Nadu player who won Chennai Grand Masters Chess Championship title

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15 முதல் இன்று (21.12.2023) வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட் - ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடினார்கள்.

இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 7 சுற்றுகளின் முடிவில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து 7வது மற்றும் இறுதிச்சுற்று ஆட்டத்தில் டைபிரேக்கர் முறையில் குகேஷ் வெற்றி பெற்றார். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். 

Next Story

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

PM Modi praises chess player Pragnananda

 

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நடத்திய 10 ஆவது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 வெகு விமரிசையாகத் தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டி வரை சென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதிய உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றும் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற செஸ் டை பிரேக்கர் சுற்றில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வீழ்ந்த நிலையில், இரண்டாம் சுற்று டிராவில் முடிந்தது. இதனால் நார்வே நாட்டின் கார்ல்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

 

இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி இருந்தார்.

 

இந்நிலையில் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவையும், அவரது பெற்றோரையும் பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு அழைத்து நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரக்ஞானந்தா தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “பிரதமரை சந்தித்தது  மிகவும் பெருமைக்குரிய தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.