Champions Trophy Series India - Pakistan cricket match today

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதியாக இந்த தொடர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் என மொத்தமாக 8 அணிகள் விளையாடி வருகின்றன.

Advertisment

அதன்படி கடந்த 19ஆம் தேதி (19.02.2025) தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்களை குவித்தது. இதனையடுத்து 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இருப்பினும் 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 260 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை நியூசிலாந்து அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 118 ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் லேதம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisment

இதனையடுத்து வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடந்த 20ஆம் தேதி (20.02.2025) இந்தியா களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று (23.02.2025) மோதுகின்றன. இந்த போட்டியானது துபாயில் உள்ள நேஷனல் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக ஏ பிரிவில் வங்கதேசத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்தியா அணி இன்று வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும் என்பதால் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதே சமயம் மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தை இந்திய அணி எதிர்கொள்கிறது. அதோடு இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Champions Trophy Series India - Pakistan cricket match today

கூடுதல் தகவலாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடக்க இந்திய வீரர் விராட் கோலிக்கு இன்னும் 15 ரன்களே தேவை என்ற நிலை உள்ளது. இதுவரை விராட் கோலி 298 போட்டிகளில் விளையாடி 13 ஆயிரத்து 985 ரன்களுடன் உள்ளார். எனவே இன்று விளையாட உள்ள விராட் கோலி 14 ஆயிரம் ரன்களை கடந்து வரலாறு படைப்பாரா எனவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த சாதனையை விராட் கோலி படைக்கும் பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாராவுக்கு பின் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.