Advertisment

சாம்பியன்ஸ் டிராபி தொடர் : இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று மோதல்!

Champions Trophy Series India - Bangladesh match today

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதியாக இந்த தொடர் 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று (19.02.2025) தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

Advertisment

இந்த தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளும் என மொத்தமாக 8 அணிகள் விளையாட உள்ளன. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதியது. இந்த போட்டியானது பாகிஸ்தானின் கராச்சி நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisment

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்களை குவித்தது. இதனையடுத்து 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இருப்பினும் 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 260 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை நியூசிலாந்து அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து வீரர் லேதம் 118 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இன்று (20.02.2025) இந்தியா களமிறங்குகிறது. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இந்தியா - வங்கதேசம் அணிகள் இதுவரை மோதியுள்ள 41 ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி 32 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே சமயம் பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. அதோடு இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

dubai Bangladesh India cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe