Advertisment

முகமது ஷமிக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்; மத்திய அரசு அறிவிப்பு

Central Govt announced arjuna award for cricket player Mohammed Shami

விளையாட்டுத்துறையில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2வது உயரிய விருதாக அர்ஜுனா விருது கருதப்படுகிறது. அந்த விருதை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி அந்த வீரர்களைக் கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தன. அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. மனைவியிடம் விவாகரத்து, சூதாட்ட புகார்கள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய முகமது ஷமி, காயத்தாலும் சில ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடாமல் இருந்தார். சூதாட்டப் புகார்களில் குற்றமற்றவர் என நிரூபணம் ஆகி, காயமும் முழுமையாகக் குணமடைந்து புத்துணர்ச்சியுடன் இந்திய அணிக்குத்திரும்பினார். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில், அனுபவ வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்.

Advertisment

இந்தத்தொடரில், முதல் நான்கு போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிக்காத முகமது ஷமி, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது லீக் போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இடம்பிடித்தார். உலகக் கோப்பையில் பங்கு பெற்ற முதல் ஆட்டத்திலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகப் பந்து வீசிய முகமது ஷமி இந்தத் தொடரில் மட்டும் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி, ஒட்டு மொத்தமாக 4 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை தொடர்களில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

முக்கியமாக அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் எனும் புதிய சாதனை படைத்தார். இதனால் இவரை கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டி வந்தனர். அந்த வகையில், இன்று முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முகமது ஷமியின் சாதனைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் சொந்த ஊரான சகஸ்பூர் அலி நகர் கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்திருந்ததாகத்தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe