Skip to main content

ருதுராஜ் கெய்க்வாட்டை புகழ்ந்த தோனி

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

captain dhoni praised csk batsman ruturaj gaikwad 

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 55 ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (10.05.2023) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 25 ரன்களையும் ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்களையும் எடுத்தனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்களையும் அக்ஸர் 2 விக்கெட்களையும் குல்தீப், லலித் யாதவ், கலீல் அஹமத் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 168 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ரூசோ 35 ரன்களையும் மனிஷ் பாண்டே 27 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியில் பதிரனா 3 விக்கெட்களையும் தீபக் சாஹர் 2 விக்கெட்களையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ருத்துராஜ் கெய்க்வாட் குறித்து பேசுகையில், "ருதுராஜ் கெய்க்வாட் மிகவும் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் ரன் எடுக்க ஆரம்பித்து விட்டால் எதிரணியினர் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். அவர் சிரமமின்றி விளையாடி வருகிறார்.அவரிடம் கிரிக்கெட் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. அவர் தன்னை மைதானத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றியமைக்கத் தயாராக இருக்கிறார். அணிக்கு இது போன்ற வீரர்கள் கிடைப்பது அரிது. ஒவ்வொரு அணிக்கும் இவரை போன்ற வீரர்களே தேவையாக இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

நீ கொடுத்ததை திருப்பிக் கொடுத்தேன்; பதிலடி தந்த சி.எஸ்.கே!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
csk vs srh csk beats sun risers hyderabad

ஐபிஎல்2024 இன் 46ஆவது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கம்மின்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு பவர் பிளேயிலேயே முதல் விக்கெட் விழுந்தது. ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழக்க, 3ஆவது விக்கெட்டுக்கு மிட்செல் களமிறங்கினார். கடந்த ஆட்டத்தைப் போலவே பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியும் காட்டிய ருதுராஜ் அரைசதம் கடந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய மிட்செல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சிக்சர்களின் நாயகன் சிவம் துபே வழக்கம் போல அதிரடியாக சிக்சர்களை பறக்க விட ஆரம்பித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் பந்துவீச்சில் புவனேஷ்வர், நடராஜன், உனாத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

கடந்த சில ஆட்டங்களாக 200 ரன்கள் எளிதில் எடுக்கப்படுவதும், சன் ரைசர்ஸ் அணி இருக்கும் ஃபார்மிற்கு இந்த ஸ்கோர் போதுமா ரன ரசிகர்கள் நினைத்தாலும், கடந்த ஆட்டத்தில் 206 ரன்களை சன் ரைசர்ஸ் எடுக்க முடியாமல் பெங்களூரு அணியிடம் தோற்றதாலும், சொந்த மைதானம் என்ற நம்பிக்கையிலும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் தன்னம்பிக்கையுடன் களமிறங்கினார். அந்த நம்பிக்கையை சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் வீணாக்கவில்லை.

சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 32, கிளாசென் 20, சமத் 19 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

குறிப்பாக கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஷர்துல், தேஷ்பாண்டே, முஸ்டபிசுர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். மிகவும் சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே 27 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளும், பதிரனா, முஸ்டபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, ஷர்துல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 98 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்த ருதுராஜ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்