Skip to main content

பட்லர் காயம்; சிக்கலில் ராஜஸ்தான்

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

Butler injured; Rajasthan in trouble

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 8வது லீக் போட்டியில் கடந்த புதன்கிழமையன்று (05.04.2023) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 197 ரன்களை குவிக்க 198 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ராஜஸ்தான் அணி 192 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

 

இந்த போட்டியில் பீல்டிங்கின் போது ஹோல்டர் வீசிய பந்தில் ஷாருக்கான் கொடுத்த கேட்சை பிடித்த போது பட்லருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக அஸ்வின் களமிறங்கினார். எனினும் ரன்கள் ஏதும் எடுக்காமல் அஸ்வின் வெளியேற மூன்றாவது விக்கெட்டிற்கு பட்லர் களமிறங்கி 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் சிறந்த கேட்சுக்கான விருதினை பட்லர் வென்றார்.

 

இந்நிலையில் ராஜஸ்தான் அணி நாளை மாலை நடக்கும் 11 ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை சந்திக்கிறது. இதில் ராஜஸ்தான் அணியில் பட்லர் ஆடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் செய்தியாளர் சந்திப்பில் பட்லர் குறித்து பேசும் போது, ஜாஸ் பட்லர் பிடித்த அந்த கேட்சிற்கு பிறகு அவரது கையில் விரலில் தையல் போடப்பட்டுள்ளது என்றார்.  

 

மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், அணியின் மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி ஓரிரு போட்டிகளில் பட்லருக்கு ஓய்வு அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் அணி டெல்லியுடனான போட்டிக்கு பிறகு சென்னை அணியுடன் மோத உள்ளது. அந்த போட்டியிலும் பட்லர் இடம்பெறுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ஜோரல் 15 பந்துகளில் 32 ரன்களை குவித்தார். ஜோரல் நாளை டெல்லியுடனான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.