Skip to main content

"சச்சினை அவுட் செய்ததால் கொலைமிரட்டல் வந்தது" - பிரபல பந்துவீச்சாளர் பகிர்ந்த சுவாரசிய தகவல்...

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

bresnan about threat calls from indian fans

 

2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சச்சின் தனது நூறாவது சதத்தை எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த போது, அவரை 91 ரன்களில் அவுட்டாக்கியதால் தனக்குக் கொலை மிரட்டல்கள் கூட வந்ததாக இங்கிலாந்து பந்துவீச்சாளர் டிம் பிரெஸ்னன் தெரிவித்துள்ளார். 

 


கடந்த 2011 ஆம் ஆண்டு தனது 99 ஆவது சதத்தை அடித்த சச்சின் எப்போது தனது நூறாவது சத்தத்தை நிறைவு செய்வார் என ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக்கொண்டிருந்தனர். அந்தச் சூழலில், இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில், சச்சின் 91 ரன்கள் எடுத்திருந்த போது ப்ரெஸ்னன் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அன்றைய தினம் சச்சினின் நூறாவது சதத்தைப் பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. மேலும், அந்தப் போட்டியில் நடுவர் ராட் டக்கெர் சச்சினுக்குத் தவறாக அவுட் கொடுத்துவிட்டார் என சர்ச்சையும் எழுந்தது.

இதனால் ரசிகர்களின் ஏமாற்றம் கோபமாக மாறி, ப்ரெஸ்னன் பக்கமும், நடுவர் பக்கமும் திரும்பியது. அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து தற்போது பேசியுள்ள ப்ரெஸ்னன், "2011-ஆம் சச்சினை அவுட் செய்த பின்னர் எனக்குத் தொடர்ந்து நிறைய மிரட்டல்கள் வந்தன. அதில் கொலை மிரட்டலும் உண்டு. உங்களுக்கு என்ன தைரியம் இருந்தால் சச்சின் விக்கெட்டை வீழ்த்தி இருப்பீர்கள் என்று ரசிகர்கள் திட்டினார்கள். அதேபோல, சச்சினுக்கு அவுட் கொடுத்த ராட் டக்கெருக்கும் இதுபோன்ற கொலை மிரட்டல் வந்துள்ளது. சில மாதங்கள் கழித்து நான் அவரிடம் பேசிய போது, வீட்டிற்கு போலீஸ் காவல் கொடுக்குமளவு பிரச்னையாகிவிட்டது என்றார்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர்.