
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும், பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த முடிவுகளில் இருந்து இந்தியா பின்வாங்காமலேயே இருக்கிறது.
இந்த நிலையில், ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய ஆசிய கிரிக்கெட் சங்கத்தினுடைய தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இதன் காரணமாக, ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் அனைத்து தொடர்களில் இருந்து விலகுவதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் இலங்கையில் மகளிருக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அந்த தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து ஆசிய கிரிக்கெட் சங்கத்திற்கு மின்னசஞ்சல் மூலமாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா அணி இல்லாமல் ஆசிய அளவில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரையும் நடத்த முடியாது என்றிருந்த சூழ்நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் பிசிசிஐ இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.