இந்திய அணிக்கு பரிசுத்தொகை வழங்கி கவுரவித்த பிசிசிஐ!

BCCI honored the Indian team with prize money

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸில் இருந்து தனி விமானத்தில் இன்று (04.07.2024) காலை டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை வந்தடைந்தனர். அப்போது இந்திய அணியினர் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (WATER SALUTE) அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கியது. டி20 உலகக் கோப்பை சாம்பியன்களைக் காணத் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களின் கடல் அலைகளுக்கு இடையே இந்த அணிவகுப்பு பேருந்து சென்றது. இந்திய கிரிக்கெட் அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது.

BCCI honored the Indian team with prize money

தங்கள் வெற்றி அணிவகுப்பில் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி 20 உலகக் கோப்பையை உயர்த்திக் காட்டினர். இந்திய அணியினரின் வெற்றி அணிவகுப்புக்குப் பிறகு அவர்களின் பேருந்து மும்பை வான்கடே மைதானத்திற்குள் நுழைந்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நடனமாடினர்.

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய்க்கான காசோலையை பிசிசிஐ அதிகாரிகள் வழங்கினர். முன்னதாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு இந்தியா அணிக்கு ரூ.125 கோடியை பரிசுத் தொகையாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் இருந்து இந்திய அணியினர் தாஜ் ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.) அதிகாரிகள் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

bcci cricket India Mumbai
இதையும் படியுங்கள்
Subscribe