Standing Goalie; India beat New Zealand

உலகக் கோப்பையின் 21வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தரம்சாலாவில்நடைபெற்றது. இதில் டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கான்வே ரன் கணக்கை தொடங்கும் முன் அவரது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான யங் 17 ரன்களில் ஷமி பந்தில் க்ளீன் போல்டு ஆனார். 19/2 என்று நியூசிலாந்து தடுமாற பின் இணைந்த ரச்சின் மற்றும் மிட்செல் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் இணைந்து பொறுமையாக ஆடி ரன்கள் குவித்தனர். ரச்சின் 12 ரன்களில் ஷமி பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா நழுவ விட்டார்.

Advertisment

பின்னர் பவுலிங்கை மாற்றி, மாற்றியும் விக்கெட் மேற்கொண்டு விழாமல் இருவரும் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து ஆடினர். ஒரு வழியாக ரச்சினை ஷமி 75 ரன்களில் அவுட் ஆக்கினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் மிட்செல் நங்கூரம் போல நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு பிலிப்ஸ் மட்டும் துணை நின்று 23 ரன்கள் எடுக்க, அதிரடியாக ஆடிய மிட்செல் சதமடித்து அசத்தினார். ஒரு நாள் போட்டிகளில் அவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். இறுதிவரை களத்தில் நின்ற மிட்செல் 130 ரன்கள் எடுத்து 49.5 ஓவரில் அவுட் ஆனார். இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.

Advertisment

இந்திய அணி 274 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் அதிரடியாய் ஆடி ரன்கள் சேர்த்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஃபெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் கில்லும் அதே ஃபெர்குசன் பந்தில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ், கோலி இணை நிதானமாக ஆடியது. இந்நிலையில் இந்திய அணி 15.4 ஓவர்களில் 100-2 என்று ஆடிக் கொண்டிருந்த போது பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடங்கப்பட்டது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் 33 ரன்களில் போல்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் , கோலி இருவரும் சிறப்பாக ரொடேட் செய்து ஆடினர்.

batting kohli; India beat New Zealand live score update

எதிர்பாராத விதமாக ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அதிரடி வீரர் சூர்யா 2 ர்ன்களில் ஃபீல்டரை சரியாக கவனிக்காமல் அவசரப்பட்டு ரன் ஓட முயன்று ரன் அவுட் ஆனார். பின்னர் கோலியுடன் ஜடேஜா இணைந்தார். கடந்த உலக கோப்பை போல ஆகிவிடுமோ என்று ரசிகர்கள் கவலை கொள்ள, இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஒன்று, இரண்டாக ரன் சேர்த்த இந்த இணை, அவ்வப்போது பவுண்டரி அடிக்கவும் தவறவில்லை. மீண்டும் ஒரு சதம் அடிப்பார் கோலி என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக 95 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் இந்திய அணி 48 ஓவர்கள் முடிவில் 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜடேஜா 39 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இறுதி வரை களத்தில் நின்று வெற்றிக்கு துணை புரிந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- வெ.அருண்குமார்