Skip to main content

நான் ரெடிதான் வரவா? பழைய ஃபார்முக்கு திரும்பிய ஆஸ்திரேலியா

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

Australia back to form won against netherlands cricket score update

 

ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் 24வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

 

இதில் டாசை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஸ், இந்த ஆட்டத்தில் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் இணைந்த வார்னர் - ஸ்மித் ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. ஸ்மித் 71 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த லபுசேன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 62 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ஜாஸ் இங்கிலீஷ் 14 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய வார்னர் ஒரு நாள் போட்டிகளில் தனது 22 வது சதத்தை பதிவு செய்தார். வார்னர் 104 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் நெதர்லாந்து பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக பறக்க விட்டார். 40 பந்துகளில் சதத்தைக் கடந்த மேக்ஸ்வெல், உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 9 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 106 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

 

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் வேன் பீக் 4 விக்கெட்டுகளும், மீக்கெரென் 2 விக்கெட்டுகளும், டுட் 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, ஆஸ்திரேலியாவின் வேகம் மற்றும் சுழல் எனும் இருமுனை தாக்குதலில் இருந்து மீள முடியாமல் 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையைப் படைத்தது. இந்திய அணி இலங்கையை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சதமடித்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- வெ.அருண்குமார் 

 

 

 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.