இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் தங்கை அனம் மிர்சா, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அசாருதீனின் மகனை மணமுடித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். அவரது தங்கையான அனம் மிர்சாவும் கிரிக்கெட் குடும்பத்திலேயே மணமுடித்துள்ளார். அனம் மிர்சாவும், அசாருதீனின் மகனான முகமது அசாதுதீனும் கடந்த சில மாதங்களாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனம் மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.