ADVERTISEMENT

கலக்கும் விஜய் சங்கர், கேதர் ஜாதவ்... சொதப்பும் அம்பதி ராயுடு...

10:42 AM Mar 12, 2019 | tarivazhagan

“பேட்டிங்கில் நம்பர் 4 இடம்தான் இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. பல வீரர்களை அந்த இடத்தில் முயற்சித்தோம். ஆனால் அணியின் தேவையை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை. அம்பதி ராயுடுவின் அனுபவம், உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் அணிகளை பல முறை வெற்றி பெற செய்துள்ள பேட்டிங் கவனிக்கத்தக்கவை. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடிய ராயுடு நல்ல புள்ளிவிவரங்களை கொண்டுள்ளார். அவர் நம்பர் 4 பேட்ஸ்மேனாக இருப்பார்” இது சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஒரு பேட்டியின்போது விராt கோலி இந்தியாவின் நம்பர் 4 பேட்டிங் குறித்து தெரிவித்த கருத்து.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கேப்டனின் இந்த கருத்துக்கு பிறகு 15 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ராயுடு 464 ரன்களை எடுத்துள்ளார். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மேட்ச் வின்னிங் சதம், நியூசிலாந்துக்கு எதிராக மேட்ச் வின்னிங் 90 ரன்கள் அடங்கும். இந்த இரண்டு போட்டிகளை தவிர்த்து ராயுடுவின் பேட்டிங் ஏமாற்றம் அளித்தது. மேலும் அவர் அவுட் ஆகும் விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஸ்விங் பந்துகளில் அதிகமாக திணறும் ராயுடு, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மைதானங்களில் அணியின் தேவைக்கு ஏற்ப பங்களிப்பாரா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

நடந்துவரும் ஆஸ்திரேலியா தொடரில் 3 போட்டிகளில் 59 பந்துகளை சந்தித்து 33 ரன்கள் எடுத்துள்ளார் ராயுடு. பார்ட் டைம் பவுலராக இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவரின் பவுலிங்கிற்கு தடை விதித்துள்ளது ஐ.சி.சி. இதனால் நாளுக்கு நாள் அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய ஏ அணி விளையாடிய போது 3 போட்டிகளில் 188 ரன்கள் எடுத்திருந்தார் விஜய் சங்கர். பலம் வாய்ந்த நியூசிலாந்து ஏ அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை தனது நிதானம் கலந்த அதிரடி மூலம் திணறடித்தார். அந்த தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய வீரரும் இவரே. பவுலிங்கிலும் ஆறாவது பவுலராக தனது பங்களிப்பை தந்தார் சங்கர்.

இதுவரை இந்திய அணிக்கு 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர் 4 முறை பேட்டிங் செய்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக 18-4 என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தபோது தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார் சங்கர். 64 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிக்கு வழிவகுத்தார்.

நடந்துவரும் ஆஸ்திரேலியா தொடரிலும் வாய்ப்பு கிடைத்த 3 இன்னிங்ஸ்களில் 123 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 104 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார் சங்கர். விளையாடிய 4 இன்னிங்ஸ்களில் 2 முறை ரன் அவுட். ஆறாவது பவுலராகவும் அணியின் தேவையை பூர்த்தி செய்கிறார்.

கேதர் ஜாதவ் பேட்டிங் ஆல்ரவுண்டராக 6-வது இடத்தில் களமிறங்கும் வீரராக உலகக்கோப்பையில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். கடைசியாக விளையாடிய 9 இன்னிங்ஸ்களில் 262 ரன்கள், பேட்டிங் சராசரி 52. இதில் 4 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். கடந்த 4 தொடர்களில் 82 ஓவர்கள் பந்துவீசியுள்ளார். 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவரின் எகனாமி ரேட் 6-க்கும் குறைவு. இதில் 8 விக்கெட்கள் எதிரணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள். பார்ட்னர்ஷிப் பிரேக்கர் என்ற பெயரை எடுத்துள்ளார் ஜாதவ்.

பேட்டிங், பார்ட் டைம் பவுலிங் என விஜய் சங்கரும், கேதர் ஜாதவும் கலக்கி வரும்நிலையில் ராயுடு, பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். மேலும் ராயுடுவின் பவுலிங், தடை செய்யப்பட்டிருப்பது அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகக்கோப்பை போட்டிகளில் 11 பேர் கொண்ட அணியில் விளையாட அம்பதி ராயுடு இன்னும் தன்னை அதிகம் தயார்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT