Skip to main content

இரண்டு வீரர்களை 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்த அகமதாபாத் அணி

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

ipl

 

கரோனா பரவல் காரணமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், ஐபிஎல் அணி நிர்வாகங்கள் தங்கள் அணியைக் கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன்னதாகவே மூன்று வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்பதால், இரு அணிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

 

இந்தநிலையில் அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்டியாவையும், ரஷித் கானையும் 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அந்த அணி சுப்மன் கில்லை 7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஹர்திக் பாண்டியா, அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

கேப்டனுக்கு மீண்டும் எதிர்ப்பு; எல்லை மீறிய ரசிகர்கள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Rohit fans who crossed the line for Opposition to hardik pandya for Captain

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், இரண்டு அணிகளுமே தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. ஐ.பி.எல். 2024 போட்டியில் 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியை பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கையை அணி நிர்வாகம் மேற்கொண்டது. 

அந்த வகையில், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களில் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் குறைந்தனர்.

இதனை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் சொந்த மண்னான அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலே, ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் 2024 இன் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போட ஹர்திக் பாண்டியா வந்த போதே, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.  அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மாஞ்ரேகர், ரசிகர்களை மரியாதையாக நடக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோஹித்... ரோஹித்.... ’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கே.கே.ஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கே.கே.ஆர் அணி நிர்வாகத்திற்கு எதிராக கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி; வரலாறு காணாத சுவாரசிய ஏற்பாடுகள்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

World Cup 2023 Finals; Unprecedented interesting arrangements

 

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நாளை (19-11-23) மோத உள்ளன. 2003 இல் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி தர வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போதாக்குறைக்கு ஆஸ்திரேலிய வீரர்களும் தாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம், இந்திய அணியை எளிதில் வெல்வோம் என்று பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். இதுவும் ரசிகர்களுக்கு இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும், ஆஸி வீரர்களின் பேச்சுக்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டியை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக நடத்த ஐசிசி மற்றும் பிசிசிஐ முடிவு செய்து உள்ளது. அந்த வகையில், இறுதிப் போட்டியில் டாஸ் போட்ட பிறகு 1.30 மணி முதல் 1.50 மணி வரை இந்திய விமானப்படையின் சூரிய கிரண் குழு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளது. சூரிய கிரண் பிரிவில் உள்ள 9 விமானங்கள் மைதானத்தின் வான்வெளியில் சாகசம் புரிய உள்ளது. இது உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக  நடத்தப்பட உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சி ஆகும்.

 

இதையடுத்து, முதல் அணி பேட்டிங் முடிவடைந்ததும் முன்னாள் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகக் கோப்பையை வென்ற அணிகளின் கேப்டன்களுக்கு மரியாதை செய்யப்பட  உள்ளது. இந்த நிகழ்ச்சி சுமார் 15 நிமிடங்கள் நடக்கும். அதன் பிறகு  இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 500 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாடி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளனர்.

 

இரண்டாவது இன்னிங்ஸின் போது 2-வது முறையாக வழங்கப்படும் குடிநீர் இடைவேளையின் போது 90 விநாடிகளுக்கு கண்கவரும் வகையில் லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது. இறுதியாக கடைசி பந்து வீசப்படும் போதும்,வெற்றி கோப்பையை சாம்பியன் அணி கைகளில் ஏந்தும் போது 1,200 டிரோன்கள் கொண்டு வானில் உலகக்கோப்பை டிராபியை வண்ணமயமாக காண்பிக்க உள்ளனர்.

 

மிகச் சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள இந்த போட்டியைக் காண, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அகமதாபாத் விமான நிலையத்தின் வெளியே சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இசையுடன் கூடிய தாண்டியா நடனம், பொய்க்கால் குதிரை நடனம் உள்ளிட்ட  நிகழ்வுகள்  நடந்து வருகின்றன.  கண்கவர் கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளால் அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வெ. அருண்குமார்